நெல்லையப்பர் ரகத்தை மீட்டதில் மகிழ்ச்சி- உழத்தி லட்சுமிதேவி.. சிறப்பு நேர்காணல்
ஒண்ணரை ஏக்கர்ல விவசாயம் செய்யத் தொடங்கி, இன்னைக்கு 10 ஏக்கர்ல விவசாயம் செய்து வருகிறார் லட்சுமி தேவி. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதன் மூலம் கவனம் ஈர்த்த லட்சுமி தேவியுடனான நேர்காணல் பின்வருமாறு-

படித்து பட்டதாரியாகி, நல்லதொரு உயரிய பதவி வகித்த லட்சுமிதேவி, இன்றைக்கு விவசாயத்தில் கோலோச்சி வருகிறார். குறிப்பாக, நம் முன்னோரால் பயிரிடப்பட்டு வந்த மருத்துவகுணம் நிறைந்த பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுக்கும் பணியைச் செய்துவருகிறார். 65 வயது பெண்ணான இவர், இயற்கை விவசாயத்தில் பல சாதனைகள் படைத்துவருகிறார். அவரது செயல்பாடுகள் குறித்து உழத்தி லட்சுமிதேவியிடம் பேசினோம்.
‘‘எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரம். சேரன்மாதேவிக்கும் முக்கூடலுக்கும் நடுவுல எங்க ஊர் இருக்கு. அப்பா வாத்தியார் மட்டுமல்ல; முக்கூடல்ல உள்ள சொக்கலால் பள்ளிக்கூடத்துல தலைமையாசிரியாராகவும் இருந்தாங்க. என்னையும், என்னோட ஆறு தங்கச்சிகளையும் தம்பியையும் நல்லா படிக்கவெச்சாங்க. எங்க ஊர் வழியா தாமிரபரணி ஆறு ஓடுறதால ஊரைச்சுத்தி வயக்காடு அதிகம். பெரும்பாலும் இங்க நெற்பயிர்தான் நடுவாங்க. பச்சைப்பசேல்னு இருக்கிற அந்த வயல்வெளிகள் என்னோட ஆழ்மனசுல பதிஞ்சிட்டு. சின்ன வயசுலயே நெற்பயிர்களை நட்டு வளர்க்கணும்னு ஆசைப்பட்டேன். அந்தக் கனவு என்னோட திருமணத்துக்குப் பிறகு நனவானது.
விவசாயத்திற்குள் காலடி வைத்தது ஏன்?
பி.எஸ்.என்.எல்-ல வேலை பார்த்துட்டிருக்கும்போது என்னோட உடல்நிலையில் கொஞ்சம் பாதிப்பு வந்ததால, வேலையை விட்டுடலாம்னு தோணிச்சு. கணவர், பிள்ளைகள் சம்மதத்தோட வி.ஆர்.எஸ் வாங்கிட்டு, விவசாயம் பார்க்கலாம்னு முடிவெடுத்தேன். ஆனா, விவசாயம் செய்றதுக்கு எங்கக்கிட்ட நிலம் கிடையாது. ஏன்னா, நாங்க பரம்பரை விவசாயி கிடையாது. அப்போதான் நண்பர் ஒருத்தர், அம்பாசமுத்திரத்துல உள்ள தன்னோட நிலத்தை விக்கிறதா சொன்னார். உடனே அந்த நிலத்தை வாங்கிப் போட்டுட்டேன். அதுமட்டுமல்ல; இன்றைய சூழல்ல நாம சாப்பிடக்கூடிய ஒவ்வொரு உணவுப்பொருள்லயும் நச்சுக் கலந்திருக்கு. அதனால, நாம சாப்பிடுற உணவுப்பொருள்களை நாமளே விளைவிக்கணும்னு முடிவெடுத்தேன். நான் வாங்குன நிலம், முழுக்க ரசாயன உரம் போட்டு விளைவிச்சதால, அதுல அடி உரமா மாட்டுச்சாண உரம் போட்டதோட, விவசாய ஆள்களை வச்சி, நிலத்தைத் திருத்தினேன்.
அந்தக் காலகட்டத்துல திருநெல்வேலி மாவட்டத்துல ‘இயற்கை விவசாயம்’ பத்தியும், பாரம்பரிய நெல் ரகங்கள் பத்தியும் பலருக்குப் புரிதல் இல்ல. ‘கருத்தக்கார்’, ‘பால்குடவாழை’ன்னு அரிசிகளோட பேர்களைச் சொன்னா, ஆச்சரியமா பார்த்தாங்க. ஏன்னா, இங்கெல்லாம் ‘அம்பை பதினாறு’, ‘பொன்னி’ன்னு ஒட்டுரக நெல் ரகங்களைத்தான் பயிர் செஞ்சிட்டு வந்தாங்க. வேற நெல் ரகங்கள் பத்தி கேட்டா, ஐ.ஆர் 36, ஐ.ஆர் 50, வெள்ளைப்பொன்னின்னு சொன்னாங்க. இப்போ நிறைய மாற்றம் வந்திருக்கு!
நானும் என் பங்குக்கு, நம்ம முன்னோர் பயிரிட்டு வந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கணும்னு ஆசைப்பட்டேன். முதல்ல 50 நெல் ரகங்களையாவது பயிரிடணும்னு நினைச்சேன். என்னோட தேடல்ல 35 வகை நெல் விதைகள் கிடைச்சுது. இதுக்காக திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு மட்டுமல்லாமல் பல ஊர்களுக்குப் போய் விவசாயிகளைச் சந்திச்சு, பாரம்பரிய நெல் விதைகளை வாங்கிட்டு வந்து, பயிரிட்டேன்.
சிவன் சம்பா, கருடன் சம்பா, வாடன் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், கொட்டாரம்சம்பா, கொத்தமல்லி சம்பா, மிளகு சம்பா, தூயமல்லி, பால்குடவாழை, கருங்குறுவை, பனங்காட்டுக் குடவாழை, கருத்தக்கார், தங்கச்சம்பா, கருப்பு கவுனி, சிவப்பு கவுனின்னு பாரம்பரிய அரிசி ரகங்கள் நிறைய இருக்கு. இதெல்லாம் சில காரணங்களால நம்மைவிட்டு மறைஞ்சி போயிட்டு. ஒவ்வொரு நெல் ரகத்துக்கும் ஒரு வரலாறு இருக்கு. உதாரணமா சொல்லணும்னா... ‘காட்டுயானம்’கிற நெல், அதோட பேருக்கு ஏத்தமாதிரி காட்டு யானை மாதிரி உயரமா வளரக்கூடியது. அதேமாதிரி, ‘கொட்டாரம்சம்பா’ன்னு ஒரு நெல் ரகம். ‘கொட்டாரம்’னா, ‘அரண்மனை’னு அர்த்தம். ஒரு காலத்துல நெல்லை மாவட்டத்துல அதிகம் பயிரிடப்பட்ட நெல்.
விதைப் பெருக்கம் செய்வதில் கவனம்:
திருவிதாங்கூர் சமஸ்தானத்துல இருந்தவங்க விரும்பிச் சாப்பிட்ட அரிசி இது. எனக்கு ஒண்ணரை ஏக்கர் நிலம் இருக்கும்போது விவசாயத்துல ரொம்ப கவனமா இருந்தேன். முதல்ல விதை நெல்களைச் சேகரிக்கத் தொடங்கி, அதுக்கு அப்புறமா மூணு ஏக்கர் நிலமா மாறுனதும், என்னோட வயல்கள்ல சில வழிமுறைகளைச் செயல்படுத்திப் பார்த்தேன். இன்னைக்கு 10 ஏக்கர் வரை விவசாயம் செய்யுற அளவுக்கு உயர்ந்திருக்கேன். நெல் விதைகளைப் பாதுகாக்கிறதோட, விதைகளை விற்பனைச் செய்றதையும் முக்கியப்பணியா செய்துட்டுவர்றேன். குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக தலா 10 நெல்ரக விதைகளைக் கொடுக்குமளவுக்கு முன்னேறியிருக்கேன். அதுமட்டுமல்லாமல் ‘விதைப் பெருக்கம்’ செய்றதுலயும் கவனம் செலுத்திட்டு வர்றேன். நெல்மணிகளை அரிசியாவும் அவலாகவும் மதிப்புக்கூட்டி விற்பனைச் செய்துட்டுவர்றேன். கருப்பு கவுனி அரிசி மட்டுமல்லாம; மற்ற பாரம்பரிய நெல் எல்லாத்தையும் அரிசியாக்குறதுக்காக மினி ரைஸ்மில் வெச்சிருக்கேன்.
Read more: மகாராஜா கவனத்தை ஈர்த்த தோவாளை மாணிக்க மாலை: பிரதமரின் பாராட்டு.. மனம் நெகிழும் வனிதாஸ்ரீ
எங்கக்கிட்ட காங்கேயம், தென்பாண்டிக்குட்டை மாதிரி 5 நாட்டு மாடுகள் இருக்கு. அவற்றோட சாணம், கோமியத்தைப் பயன்படுத்தி ‘பஞ்சகவ்யா’, ‘ஜீவாமிர்தம்’, ‘அமிர்த கரைசல்’ தயாரிக்கிறேன். ‘ராவே’ திட்டத்துல மாணவர்கள் எங்களோட விவசாய நிலத்துல தங்கி, படிக்கிறாங்க. அதேபோல, கிராமப்புற விவசாயிகளும் எங்களோட நிலத்துக்கு வந்து, வேளாண் நுணுக்கம் பற்றி தெரிஞ்சுக்கிறாங்க.
மற்றபடி, எங்களோட பகுதியில வழக்கமா ‘குத்து நடவு’ முறையில நாத்து நட்டவங்களை ‘பெருமாள் நடவு’ன்னு சொல்லப்படற ஒண்ணரை அடி இடைவெளி விட்டு நடக்கூடிய புதிய முறையை உருவாக்கினேன். இதைப் பலருக்குச் சொல்லிக்கொடுத்தேன். ஆனா, ‘இதென்ன புதுப்பழக்கம்?’னு எல்லோரும் சொன்னாங்க. இந்த முறையில நாத்து நட்டா, நல்ல மகசூல் கிடைக்கும்கிறதை எடுத்துச் சொன்னதோட, செஞ்சும் காட்டுனேன். அதை எல்லோரும் கண்ணாலப் பார்த்து வியந்து, பாராட்டுனாங்க!
நெல்லையப்பர் நெல் ரகம்:
இதேபோல, ‘நெல்லையப்பர்’ அப்படிங்கிற நெல் ரகத்தை மீட்டெடுத்ததை என்னால மறக்கமுடியாது. செண்பகராமன் பள்ளு இலக்கியத்துல ‘திருநெல்வேலிநாதன்’ அப்படிங்கிற பெயர்ல அழைக்கப்பட்டதுதான், ‘நெல்லையப்பர் நெல்’. வள்ளியூர்ல இருக்கிற எங்களோட மூதாதையர் வீட்ல நெல்குதிர்ல 45 ஆண்டுகள் பாதுகாப்பா வெச்சிருந்தாங்க. அந்த நெல்ரகத்தை எடுத்து முளைக்கவைக்க நான் முயற்சிபண்ணப்போ, ‘அது முளைக்காது’ அப்படின்னுதான் எல்லோரும் சொன்னாங்க. ஆனா, நான் 4 கிலோ அளவுல அந்த நெல்ரகத்தைப் பயிரிட்டேன். ரொம்பவும் சிரமப்பட்டுதான் வளர்த்தெடுத்தேன். இது, 105 நாள்ல விளையக்கூடிய வெள்ளை சன்னரக அரிசி, ஈரோடு, விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் பகுதிகள்ல இருக்கிற விவசாயிகளுக்குக்கூட நெல்லையப்பர் நெல்மணிகளைக் கொடுத்திருக்கேன்.
இதுதவிர, பழைய நெல் ரகங்களை மீட்டெடுத்து, சிறியரக மண்பானைகளில் சேகரிச்சு வைக்கிறேன். ‘அதென்ன உழத்தி?’ அப்படின்னு பலரும் யோசிக்கலாம். வேளாண் தொழில் செய்றவங்கள ‘விவசாயி’, ‘உழவன்’னு சொல்வாங்கதானே? உழவனுக்கு பெண்பால்தான் ‘உழத்தி’ ’’ என்று புன்னகையுடன் சொல்லிமுடித்தார், லட்சுமிதேவி.
நம்மாழ்வார் விருது, சிறந்த தொழில் முனைவோர் விருது, சிறந்த சமூகநல பாதுகாவலர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாரம்பரிய நெல் ரகங்களில் அதிக விளைச்சல் பெற்றதற்காக ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது’ம் வழங்கப்பட்டுள்ளது. 100 வகையான பாரம்பரிய நெல்ரகங்களைப் பாதுகாப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் 3 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் கடந்தாண்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ‘பொதிகை உழத்தி’ என்ற பெயரில் விதை வங்கி அமைத்துள்ளார், லட்சுமிதேவி.
(கட்டுரை: எம்.மரிய பெல்சின்/ குமுதம் சிநேகிதி/1.5.2025)
What's Your Reaction?






