பாலியல் புகார்.. பதவி விலகுகிறாரா பிரஜ்வால்? JDS-ல் இருந்து நீக்கப்படுகிறாரா?
பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஜே.டி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
                                கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியின் எம்.பியாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) கட்சியின் நிறுவனருமான தேவகவுடாவின் பேரனாவார். கடந்த 26ம் தேதி மீண்டும் பிரஜ்வல் போட்டியிட்ட ஹசன் தொகுதி உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடந்துமுடிந்த பின், அவர் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த அவரது வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவியது. பிரஜ்வல் வீட்டு பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் இவ்விவகாரம் பூதாகரமானது. தொடர்ந்து 8,000 பென்டிரைவர்களில் இருந்து 3,000 வீடியோக்கள் வெளியானதாக அதிர்ச்சித் தகவலும் வெளியானது. அதில் 68 வயது மூதாட்டியும் தன்னை விட்டு விடுமாறு கதறிய காட்சிகளும் இருந்ததாக தெரிகிறது. இந்த வீடியோக்களில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணாவும் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பிரஜ்வாலின் மாமாவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி, இன்று ஹுபள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் பிரஜ்வால் கட்சியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறினார். தனது நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்கும் வகையில் பொய்தகவல் பரப்பப்படுவதாக பிரஜ்வால் தெரிவித்த நிலையில், பழைய வீடியோக்கள் தற்போது வைரலாவதாக அவரது தந்தை ரேவண்ணா தெரிவித்தார். தொடர்ந்து பாஜகவுக்கும் இந்த பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மதச்சார்பற்ற ஜனதா தளம் திட்டவட்டமாக அறிவித்த போதும், விசாரணை தொடர்பாக பாஜக எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனக்கூறி எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.
இந்நிலையில் இன்று ஹூபள்ளியில் நடைபெறும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் பிரஜ்வாலை கட்சியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹசன் தொகுதி எம்.பியாக அவர் பதவி வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            