ஏப்ரல் 29ல் வரையாடு கணக்கெடுப்பு தொடக்கம்.. 3 நாட்கள் நடைபெறும்.. வனத்துறை அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் வரையாடு கணக்கெடுப்பு பணி வருகிற 29ஆம் தேதி தொடங்கி மே 1ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டை பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும், நாட்டிலேயே முதல்முறையாக 'நீலகிரி வரையாடு திட்டம்' ரூ.25 கோடியில் செயல்படுத்தப் பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, வரையாட்டு இனங்களை பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட வரையாட்டுக்கு சிகிச்சை அளித்தல், ஆண்டுதோறும் அக்டோபர் 7ம் தேதியை ‘வரையாடு தினம்’ என அனுசரித்தல், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நீலகிரி வரையாடுகள் இனத்தை பாதுகாக்கம் வகையில் 2022 - 2027 காலத்தில் திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஶ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் ஏப்ரல் 29 முதல் மே 1ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் வனவிரிவாக்க மையத்தில் வன அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகர்கள், வனப்பாதுகாவலர்கள், வனவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமில் பேசிய துணை இயக்குனர் தேவராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நீலகிரி வரையாடுகள் உண்ணும் தாவரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இப்பகுதியில் வரையாடுகள் கணிசமாக இருப்பதால் இங்கிருந்து கணக்கெடுப்பு தொடங்குகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகங்களில் வரையாடு அதிகமாக வாழும் 30 பகுதிகளை தேர்ந்தெடுத்து ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய மூன்று நாட்கள் வரையாடு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் வனத்துறை அலுவலர்கள் அனைவரும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
What's Your Reaction?