வேகம் எடுக்கும் தேர்தல் பணி : ஒரே நாளில் 9 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் திமுக வேகம் காட்ட தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 9 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திமுக நடத்தியுள்ளது. 

வேகம் எடுக்கும் தேர்தல் பணி : ஒரே நாளில் 9 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 
ஒரே நாளில் 9 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 

திமுக கூட்டணி கட்சிகள் தலைவர்கள் அடுத்தடுத்து அண்ணா அறிவாலயம் வருகை புரிந்துள்ளனர். காங்., மதிமுக, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல்., தவாக, மமக, மஜக, எஸ்.டி.பி.ஐ., கொ.இ.பே. ஆகிய கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 

தி.மு.க. உடனான பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, உறுதியான கூட்டணி. தி.மு.க.வுடன் மட்டும் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

தி.மு.க. தவிர வேறு யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முதலமைச்சர் கூறி உள்ளார். தி.மு.க.வுடன் காங்கிரஸ் நடத்திய முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.  “கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக முதல் சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரண்டாவது சுற்றுக்கு எப்போது அழைக்கிறார்களோ… அப்போது சென்று பேசுவோம்.  என்னால் இப்போது எதையும் சொல்லமுடியாது.  நாங்கள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அதுதான் எங்கள் நிலைபாடு. இதை அவைதலைவர் சொல்லிவிட்டாரே. தொகுதிப் பங்கீடு பற்றி முதல்வரிடம் எதுவும் பேசவில்லை” என்றார். 

தவாக தலைவர் வேல்முருகன்: சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கூடுதல் இடங்களைத் தாருங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். நாங்கள் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 6 சட்டமன்ற தொகுதிகள் வேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருந்தோம். ‘நாங்கள் உங்களுடைய கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்’ என்று திமுக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விசிக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுடன் நாளை மறுநாள் திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடதக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow