தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி...மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விமர்சனம்...
தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி இருப்பதால் பெங்களூரைப் போல பெரிய முதலீடுகள் வரவில்லை என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு பாஜக மூன்றாவது பெரும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் தனது மொத்த பலத்தையும் காட்டி வருகிறது. பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து அனல் பறக்க பேசி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தமிழ்நாட்டிற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ஆதரவு கோரி தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பங்கேற்றார். அப்போது ராஜஸ்தான் இளைஞர் அமைப்பின் நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆதரவு கோரினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அனுராக் சிங் தாக்கூர், "வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. இந்த முதலீடுகள் பல்வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதனை பயன்படுத்திக் கொள்கின்றன. தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் அதிக நிறுவனங்கள் முதலீடு செய்யவில்லை. இளைஞர்களை வளர்ப்பதற்கு பதிலாக ஒரு நபரின் வளர்ச்சிக்காக திமுக பாடுபடுவதால் தமிழ்நாட்டிற்கு பெரிய முதலீடுகள் வரவில்லை" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அனுராக் சிங் தாக்கூர், "பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் அனைத்து துறைகளும் பெரும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். இந்தியாவில் உள்ள அனைவரும் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சி மிக பெரிய அளவில் உள்ளது" என பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தனது பலத்தைக் காட்ட பாஜக முயன்று வரும் நிலையில், அக்கட்சியின் பெரும் தலைவர்கள் தொடர்ந்து களமிறங்கி வருவது தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் களத்தில் இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
What's Your Reaction?