19-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் 16 ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். நேற்று (13-05-26) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (14-05-2026) காலை 0830 மணியளவிலும் அதே பகுதிகளில் நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையப்பகுதிகளிலிருந்து தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை, வடக்கு தமிழகம், ராயலசீமா மற்றும் வடக்கு உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன்காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 15-05-2026: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
16-05-2026: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 17-05-2026 - 19-05-2026: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?