IPL 2027: ரூ.18 கோடிக்கு மெகா ட்ரேட்.. PBKS-க்கு மாறிய ஹர்திக் பாண்டியா.. MI-ல் அர்ஷ்தீப் சிங்!

ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்புக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பைக்கும் மாற்றப்பட்டனர்.

Nov 11, 2026 - 10:46
IPL 2027: ரூ.18 கோடிக்கு மெகா ட்ரேட்.. PBKS-க்கு மாறிய ஹர்திக் பாண்டியா.. MI-ல் அர்ஷ்தீப் சிங்!
Arshdeep Singh and Hardik Pandya

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்புக்கான (IPL Retention) கெடுவுக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கும், பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ட்ரேட் (Trade) செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஹர்திக் பாண்டியா ட்ரேட் குறித்துப் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளது இன்று (நவ.11) உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன் அவரது ஊதியம் ரூ.16.35 கோடியாக இருந்த நிலையில், தற்போது உயர்ந்துள்ளது. அதேவேளையில், அர்ஷ்தீப் சிங் தனது தற்போதைய ரூ.18 கோடி ஒப்பந்தத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறார்.

இந்த ட்ரேட் குறித்து அர்ஷ்தீப் சிங்கின் தந்தை தர்ஷன் சிங் கூறுகையில், "இந்த ட்ரேட் நடந்தது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. அவர் பிறந்த மண்ணான பஞ்சாப் மீது அவருக்கு எப்போதும் தனி பாசம் உண்டு. இருப்பினும், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் சமநிலையை உருவாக்கவே இத்தகைய முடிவுகளை எடுக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அங்கு ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா தனது இரண்டாவது கட்டமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய 3 சீசன்கள் பெரிய அளவில் அமையவில்லை. அவர் விளையாடிய 39 போட்டிகளில் (35 இன்னிங்ஸ்கள்) 21.53 சராசரியுடன் 647 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதில் அதிகபட்ச ரன் 48* ஆகும். பந்துவீச்சில் 39 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இவரது கேப்டன்சியின் கீழ் மும்பை அணி 2025-இல் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய போதிலும், 2024 மற்றும் 2026 சீசன்களில் முறையே கடைசி இடத்தையும் 9-வது இடத்தையும் பிடித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 8 சீசன்கள் விளையாடிய அர்ஷ்தீப் சிங், 2019-இல் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். ஐபிஎல் தொடரில் 96 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார். மேலும், இந்த ட்ரேடின் ஒரு பகுதியாக விக்கெட் கீப்பர்-பேட்டர் விஷ்ணு வினோத்தும் பஞ்சாப்பில் இருந்து மும்பை அணிக்கு மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow