Indian 2: STR, SK, ராம் சரண்... இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்..?

கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட், டோலிவுட்டை சேர்ந்த டாப் ஹீரோக்கள் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 1, 2024 - 12:36
Indian 2: STR, SK, ராம் சரண்... இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்..?

சென்னை: கடந்த 5 ஆண்டுகளாக பல தடைகளை சந்தித்த இந்தியன் 2, தற்போது ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அதன்படி இந்தப் படம் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. 1996ல் வெளியான இந்தியனுக்குப் பின்னர் கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணி இணைந்துள்ள இந்தியன் 2, முதல் பாகத்தை போல ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்தியன் 2 ஆடியோ லான்ச் இன்று (ஜூன் 1) மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உட்பட இந்தியன் 2 படக்குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.   

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்
இவர்களுடன் சிறப்பு விருந்தினர்கள் சிலரும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விக்ரம் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் தனது ராஜ்கமல் பேனரில் பட தயாரிப்பில் இறங்கிவிட்டார் கமல்ஹாசன். அதன்படி, சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் ஹீரோவாக நடிக்கும் இரண்டு படங்கள் ராஜ்கமல் பேனரில் உருவாகி வருகின்றன. அதன்படி சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள அமரன் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள அமரன், இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸாகவுள்ளது. இதனால் இன்றைய இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

கமலின் அன்புத் தம்பி சிம்பு
அதேபோல், சிம்புவின் 48வது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னொரு பக்கம் கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் சிம்பு நடிக்கிறார். அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாகவே கமலின் அன்புத் தம்பியாக வலம் வருகிறார் சிலம்பரசன். இதனால் சிம்புவும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கமல் – லோகேஷ் கூட்டணியில் வெளியான விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலும் சிம்பு பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கேம் சேஞ்சர் ஹீரோ ராம் சரண்
சிவகார்த்திகேயன், சிம்பு வரிசையில் டோலிவுட் ஹீரோ ராம் சரணும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் 2 ட்ராப் ஆகியிருந்த நேரத்தில் டோலிவுட்டில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை தொடங்கினார் ஷங்கர். ராம் சரணுடன், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படமும் இந்தாண்டு ரிலீஸாகவுள்ளது. இதனால் கேம் சேஞ்சர் படத்தின் ஹீரோ என்ற முறையில், இந்தியன் 2 ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ராம் சரண் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. ராம் சரணுடன் அவரது தந்தையும் டோலிவுட் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியும் பங்கேற்கலாம் எனத் தெரிகிறது.

இந்தியன் 2 ப்ரோமோஷன்
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை தொடங்கவுள்ளது படக்குழு. ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கரும் கலந்துகொண்டனர். தற்போது இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அடுத்தடுத்து சில தரமான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, அதில் கமல்ஹாசனும் பங்கேற்கவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow