அதிமுகவில் மீண்டும் விரிசல்?.. பறிபோகிறதா எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பதவி.. உச்சக்கட்ட டென்சன்

2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அதிமுக மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

May 3, 2024 - 13:13
அதிமுகவில் மீண்டும் விரிசல்?.. பறிபோகிறதா எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பதவி.. உச்சக்கட்ட டென்சன்

நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக 200 ஆண்டுகள் இருக்கும் என்று சட்டசபையில் கடந்த 2016ஆம் ஆண்டு பேசினார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் மாதம் உயிரிழந்தார். 

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நான்குமுனை போட்டி என்று ஊடகங்களில் அனல் தெறிக்க விவாதங்கள் நடந்தாலும், நாதக இறக்கிய அதிரடி வேட்பாளர்களைப் போல் அதிமுக தங்கள் வேட்பாளர்களை களமிறக்க தவறவிட்டது எனலாம்… இந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் களத்தில் சரியாக வேலை பார்க்கவில்லை என்ற ரிப்போர்ட் எடப்பாடி பழனிசாமிக்கு பறந்துள்ளதாக கூறப்படுகிறது… 

அதற்கு காரணம், எப்படியும் ஜெயிக்கப் போவதில்லை, எதற்காக தேவையில்லாமல் அவமானப்பட வேண்டும் என்று எண்ணி அதிமுக மூத்த தலைகள் களமிறங்காமல் கல்தா கொடுத்த நிலையில், மாவட்டச் செயலாளர்களும் சுணக்கம் காட்டி, பூத் கமிட்டிகளில் போதுமான அளவு ஆட்களை இறக்காமல் இருந்ததுதான்.

இந்த நிலையில், 2026 தேர்தலை குறிவைத்து நகருவதாக கூறப்படும் அதிமுகவின் எதிர்காலம் என்பது மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், அப்போது நடந்த 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களை கைப்பற்றியது அதிமுக. அதுமட்டுமல்லாமல் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 60+ இடங்களை அதிமுக கைப்பற்றி எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. இந்த வெற்றி என்பது ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து இருந்ததால்தான் கிடைத்தது… 

கடந்த 2022ஆம் ஆண்டு ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பல சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு நடக்கும் முதல் மக்களவைத் தேர்தல் என்றாலும் பெரிய அளவில் அதிமுக ஆர்வம் காட்டாமலே இருக்கிறது… 

அதற்குக் காரணம் தேசிய அரசியலை தாண்டி மாநில அரசியலிலேயே கவனம் செலுத்துவதால்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். வரவிருக்கும் 2026 தேர்தலுக்காக அதிமுக தயாராகிக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் இருந்தாலும், சில எம்.எல்.ஏக்கள் எடப்பாடியின் தலைமையை ஏற்க போவதில்லை என்று உறுதியாக இருப்பதாகவும், மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்… இதனால் எடப்பாடியிடம் இருந்து தலைமை பதவி பறிப்போகும் அபாயமும் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை அதிமுக மீண்டும் பிளவுப்பட்டால், அது யார் யாருடைய தலைமைகளில் இயங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் மாஜி அமைச்சர், எஸ்.பி.வேலுமணி புது அணி என்ற ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை எஸ்.பி.வேலுமணி விரும்பாததே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது… அதனால்தான் அவர் இம்முறை தேர்தலில் அதிக அளவில் களத்தில் இறங்காமல், வெறும் பிரசார நேரங்களில் மட்டும் பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

ஒருவேளை மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால், கட்சி பிளவுப்படுவதை எடப்பாடி தடுப்பார் என்றும், அப்படி இல்லையேல் அதிமுக உடைவதை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக கண்டிப்பாக டிடிவி மற்றும் ஓபிஎஸ் வசம் வந்துவிடும் என்று அடித்துக் கூறினார்… இதுவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது..  அதிமுக உட்கட்சி பூசலால் எஸ்.பி.வேலுமணி அணி பிரியும் பட்சத்தில், அவர்கள் ஓபிஎஸின் தலைமையை ஏற்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அதிமுக உட்கட்சி பூசல் குறித்து தகவல் வெளியாகியுள்ள நிலையில், குறைந்துவரும் வாக்கு சதவிகிதம் அதிமுகவிற்கு மேலும் ஒரு தலைவலியாக அமைய இருக்கிறது 

மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் குறிப்பிடத்தகுந்த வாக்கு சதவீதத்தில் இருந்து 7 முதல் 8 சதவீத வாக்குகள் பாஜக மற்றும் நாதகவிற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார் அரசியல் விமர்சகர் மணி… இதனால் மண்டையை பிய்த்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஏற்கனவே தேர்தலில் தோல்வி, கூட்டணியைவிட்டு விலகியதால் அபாயம் என இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் ஒரு பிளவை சமாளிப்பாரா? அதே நேரம் அதிமுகவிற்கான வாக்கு வங்கியை தக்க வைப்பாரா? ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow