கனரா வங்கியின் பணம் அபேஸ்.. கம்பி எண்ணும் உதவி மேலாளர்
விழுப்புரம் கனரா வங்கியில் 85 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் கையாடல் செய்ததாக வங்கியின் உதவி மேலாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் கனரா வங்கியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரகு என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகளை கண்காணிப்பது மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதும் தான் அவருடைய வேலை.
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில், ஒவ்வொரு முறை பணம் நிரப்பச் செல்லும்போதும், சிறுக சிறுக கையாடல் செய்து வந்துள்ளார் ரகு. இந்நிலையில் அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் அனைத்து உண்மையும் வெளிப்பட்டது. வேறு ஒருவரின் கடவுச்சொல்லை பயன்படுத்தி 85 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் வரை வங்கிப் பணத்தை, ரகு கையாடல் செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து வங்கி கிளை மேலாளர் ஜெயபாலாஜி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த ரகு தேடப்பட்டு வந்த நிலையில், சென்னை ஆவடியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ரகு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கனரா வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டு பணத்தை உதவி மேலாளரே சுருட்டிய விவகாரம் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?