அதிக தொகுதி வேண்டும் : காங்கிரசு ஐவர் குழு ஸ்டாலினிடம் வலியுறுத்தல்
தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது. அப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கொடுக்க வேண்டும் என ஐவர் குழு ஸ்டாலினை வலியுறுத்தியதாக தெரிகிறது.
தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்திருந்தது. இந்த குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஐவர் குழுவினர் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தனர். அப்போது, இந்த முறை அதிக தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என பல நிர்வாகிகள் வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிீரஸ் ஐவர் குழு சந்தித்து பேசினார். காங்கிரசில் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.
இந்த சந்திப்பின் போது, கடந்த முறையை விட 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும் என்றும், தற்போது சிட்டிங் எம்எல்ஏ தொகுதிகளை அதில் இடம் பெற வேண்டும் எனவும் ஸ்டாலினிடம் ஐவர் குழுவினர் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை, "தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. காங்கிரஸ் தலைமை அமைத்த 5 பேர் கொண்ட எங்கள் குழு இன்று மரியாதை நிமித்தமாக முதல்வரைச் சந்தித்தோம். திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்ட பிறகு எங்களுடைய பேச்சுவார்த்தை தொடங்கும்" என்றார்.
What's Your Reaction?

