சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்: கொட்டி தீர்த்த கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய நாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நாளை கிருஷ்ணகிரி, திருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இன்றுடன் சென்னையில் மழை ஓயும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான, 'டிட்வா' புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. மாதவரம், கொளத்துார், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், கொடுங்கையூர், புழல் - செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள 27 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீர் உடனடியாக மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஓட்டேரியில் நேற்று இரவு வீடு ஒன்று இடிந்து விழந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
What's Your Reaction?

