குடியரசு தின விழா கொண்டாட்டம்: செங்கோட்டையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்
நாடு முழுவதும் குடியரசு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லி கடமைப் பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன. அங்கு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
செங்கோட்டையில் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள வருகை தந்த ஜனாதிபதி திரெளபதி முா்மு, சிறப்பு விருந்தினா்கள் ஆகியோா் வீரா்கள் புடைசூழ கடமைப் பாதைக்கு வருகை தந்தனர். அவரையும், அவரை தொடர்ந்து வருகை தந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனையும் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
செங்கோட்டையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றிய நிலையில், இந்திய விமானப்படையைச் சோ்ந்த நான்கு எம்ஐ-1வி ஹெலிகாப்டா்கள் தேசியக் கொடி மீதும், பாா்வையாளா்கள் மீதும் மலா்தூவியது. தொடர்ந்து ஜனாதிபதி திரெளபதி முர்மு தலைமையில் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோா் கலந்து கொண்டுள்ளனர். ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய ராணுவத்தின் படை வலிமையை சாற்றும் வகையில், அா்ஜுன் டாங்கி உள்ளிட்ட பீரங்கிகள், கவச வாகனங்கள், ஆபரேஷன் சிந்தூரின்போது பயன்படுத்தப்பட்ட பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், சூா்யாஸ்திரா ராக்கெட் லாஞ்சா் அமைப்பு, நாக் ஏவுகணை அமைப்பு, நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன. குடியரசி தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆளுநர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
போர்நினைவு சின்னம் பிரதமர் மரியாதை
குடியரசு தினத்தையொட்டி, போர்களில் நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும் வகையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர். போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மோடி, ராகுல் வாழ்த்து செய்தி
பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து குறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில் :“குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாள், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டிற்கும், புத்துணர்ச்சிக்கும் உற்சாகம் அளிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:”சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு நாள் நல்வாழ்த்துகள்.நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த மாபெரும் ஆயுதம் - அதுவே நமது குரல், நமது உரிமைகளுக்கான பாதுகாப்புக் கேடயம்.
சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலமாக மட்டுமே வலுப்பெறும் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதியான அடித்தளம் மீதுதான் நமது குடியரசு நிலைப்பெற்றுள்ளது.அரசியலமைப்பைப் பாதுகாப்பது இந்தியக் குடியரசைப் பாதுகாப்பதாகும். இது நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். ஜெய் ஹிந்த்! ஜெய் அரசியலமைப்பு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?

