மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் நாளை தீர்மானம்: முதல்வர் விஜய் தாக்கல் செய்கிறார்  

காவிரியில் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் நாளை தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் விஜய் தாக்கல் செய்ய உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Jun 18, 2026 - 20:37
மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் நாளை தீர்மானம்: முதல்வர் விஜய் தாக்கல் செய்கிறார்  
மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  காவிரி நீரால் பயன்பெறும் கேரளா, புதுச்சேரி அரசுகளும் புதிய அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் கர்நாடகாவில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். 

அண்மையில் டில்லி சென்ற டி.கே.சிவக்குமார், பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்த மேகதாது அணை திட்டத்திற்கான அனுமதியை விரைந்து அளிக்குமாறு வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி, மேகதாது அணையில் தென்மாநிலங்கள் பயன் பெறும் என்றும், ஒரு பாக்கெட் தண்ணீரை கூட கர்நாடகா மேகதாது அணையில் இருந்து எடுக்காது என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் உரையின் போது, 'கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மேகதாது அணை தொடர்பாக நாளை தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறி தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் நாளை சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow