யார் இந்த முத்துராமலிங்கத் தேவர்? தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுவது ஏன்? பின்னணியில் இருக்கும் வரலாறு!
இன்று ராமநாதபுரம் மாவட்டமே திருவிழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தி விழாவின் நாயகரான முத்துராமலிங்கத் தேவர் யார்? இவருக்கும் தமிழ்நாடுஅரசியலுக்கும் என்ன தொடர்பு? இவர் சமூகத்துக்கு ஆற்றிய பங்கு என்ன?அதைப் பற்றி வாங்க கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா?
தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும், சுதந்திரப் போராட்டத்திலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ஆன்மிகம், அரசியல், தேசியம், சமூகப் போராட்டம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிய அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தீவிர ஆதரவாளராகவும், பார்வர்டு பிளாக் கட்சியின் முக்கியத் தலைவராகவும் விளங்கினார்.
குறிப்பாக, தென் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்த முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளும் நினைவு நாளும் ஒரே நாளில் வருவதால், ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி என்ன செய்தார் முத்துராமலிங்கத் தேவர்? வாங்க கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா? வாங்க!
யார் இந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்?
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் 1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி உக்கிரபாண்டித் தேவர் - இந்திராணி அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோதே தாயார் இந்திராணி அம்மையாரை இழந்தார். பின்னர் தனது சித்தியையும் இழந்ததால், பாட்டியின் அரவணைப்பில் பசும்பொன் அருகேயுள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் வளர்ந்தார்.
சிறுவயது முதலே ஆன்மிகத்திலும், சமூக நலனிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர், இளம் வயதிலேயே அரசியல் களத்திலும் தடம் பதிக்கத் தொடங்கினார்.
அரசியல் பயணமும் நேதாஜியுடனான சந்திப்பும்!
1927-ம் ஆண்டு தனது 19-வது வயதில் சென்னைக்கு வந்த முத்துராமலிங்கத் தேவர், அப்போது காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த சீனிவாச ஐயங்காரைச் சந்தித்தார். தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
1939-ம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின்போதுதான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. நேதாஜியின் தேசியவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தேவர், அவருக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கினார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் காந்தியின் ஆதரவைப் பெற்ற பட்டாபி சீதாராமையாவை எதிர்த்து நேதாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, 1939-ம் ஆண்டு நேதாஜி பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார். முத்துராமலிங்கத் தேவரும் அக்கட்சியில் இணைந்து தமிழ்நாட்டில் அதன் வளர்ச்சிக்காகப் பணியாற்றினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம்!
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமலில் இருந்த குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு (Criminal Tribes Act) எதிராக முத்துராமலிங்கத் தேவர் தொடர்ந்து குரல் கொடுத்தார். குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களைப் பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாகக் கருதி, அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திய இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தென் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைத் திரட்டிப் போராடினார்.
அதேபோல் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பலமுறை சிறைத் தண்டனையையும் அனுபவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசத்தில் தேவரின் பங்கு!
முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசப் போராட்டம்.
அந்தக் காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கோவில்களுக்குள் சென்று வழிபடுவதற்குப் பல்வேறு தடைகள் இருந்தன. இதனை எதிர்த்து, மதுரையில் தாழ்த்தப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் முயற்சியில் தேசபக்தர் ஏ. வைத்தியநாத ஐயர் ஈடுபட்டார்.
இதற்கு எதிர்ப்புகள் எழுந்தபோது, வைத்தியநாத ஐயருக்கு ஆதரவாக முத்துராமலிங்கத் தேவர் துணை நின்றார். 1939-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற ஆலயப் பிரவேசத்தின்போது, வைத்தியநாத ஐயருடன் தேவரும் உடன் சென்றார். இதன் மூலம் சமூகத்தில் நிலவிய தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
தேர்தல் அரசியலில் முத்துராமலிங்கத் தேவர்!
1937-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துராமலிங்கத் தேவர், தொடர்ந்து தேர்தல் அரசியலிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
1946-ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் பார்வர்டு பிளாக் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1957-ம் ஆண்டு முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி என இரண்டிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார்.
நாடாளுமன்றத்திலும் தனது பேச்சாற்றலால் கவனம் ஈர்த்தார். 1959-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பைப் பெற்ற அவர், தனது அனல் பறக்கும் உரையால் அவையின் கவனத்தை ஈர்த்ததாக அப்போது வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பாராட்டியிருந்தது.
எளிமையும் ஈகை குணமும்!
அரசியலில் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தபோதிலும், தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையைக் கடைப்பிடித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என்று அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு சிறப்பு மலர்' நூலில், அவருடன் 21 முறை சிறை சென்ற ராஜாத் தேவர், முத்துராமலிங்கத் தேவரின் ஈகைக் குணம் குறித்து பதிவு செய்துள்ளார்.
அதில், தனக்குச் சொந்தமான 32 கிராமங்களின் வருவாயையும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி வந்ததாகவும், தாயை இழந்தபோது தனக்குப் பாலூட்டி வளர்த்த இஸ்லாமியப் பெண்ணுக்கு ஆண்டுதோறும் நெல் மற்றும் சேலைகளை வழங்கி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் உணவு உண்ணும் முன்பு குறைந்தது 50 பேருக்காவது உணவு பரிமாறப்பட வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் அந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுவது ஏன்?
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளான அக்டோபர் 30-ம் தேதியே அவரது நினைவு நாளாகவும் அமைந்துள்ளது. 1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த அவர், 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தனது 55-வது வயதில் மறைந்தார்.
இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி அவரது பிறந்தநாள் விழாவும் நினைவு நாள் குருபூஜையும் இணைந்து அனுசரிக்கப்படுகின்றன. இதுவே தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை என அழைக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடுகளும் மரியாதை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பசும்பொன்னுக்கு வந்து அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
இந்த நாளில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தேவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.
சமாதியிலிருந்து திருக்கோவிலாக மாறிய நினைவிடம்!
முத்துராமலிங்கத் தேவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆரம்ப காலத்தில் 'பசும்பொன் தேவர் சமாதி' என்று அழைக்கப்பட்டது. பின்னர் 'பசும்பொன் தேவர் நினைவிடம்' என்றும், அதன்பிறகு 'பசும்பொன் தேவர் நினைவாலயம்' என்றும் அழைக்கப்பட்டது.
தற்போது அது 'பசும்பொன் தேவர் திருக்கோவில்' என்று மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையின்போது ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து வழிபட்டு மரியாதை செலுத்துகின்றனர்.
முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை என்பது அரசியல், சுதந்திரப் போராட்டம், சமூக உரிமைகள், ஆன்மிகம் எனப் பல்வேறு தளங்களுடன் தொடர்புடையது. 1963-ம் ஆண்டு மறைந்தாலும், அவரது பிறந்தநாளும் நினைவு நாளும் இணைந்து அனுசரிக்கப்படும் அக்டோபர் 30-ம் தேதி, தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
What's Your Reaction?



