100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும்! முசிறியில் பாரிவேந்தர் பரப்புரை
மத்திய பாஜக அமைச்சர்கள் மீது எந்த லஞ்சக் குற்றச்சாட்டு சுமத்த முடியுமா என்று பாரிவேந்தர் கேள்வி எழுப்பினார்
திருச்சி மாவட்டம் முசிறியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஐஜேகே தலைவர் பாரி வேந்தர், பாஜக அமைச்சர்கள் பெயரில் ஏதும் லஞ்சம் பெற்ற புகார்கள் உண்டா எனக் கேள்வி எழுப்பி வாக்கு சேகரித்தார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் களத்தை அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்கள் மூலம் விறுவிறுப்பாக வைத்துள்ளன. தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. இதில், பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மேலும் அவருக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டதை அடுத்து, அவர் களம்காண்கிறார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறியில் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, பெரம்பலூர் தொகுதி மக்களுக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறேன் என்று கூறினார். தொகுதியின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்த பாரிவேந்தர், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு உரிய ஊதியம் வந்து சேர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வருகிறது என்றும், 100 நாட்களை, 150 நாட்களாக அதிகரிக்கவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமரின் மத்திய அரசில் உள்ள அமைச்சர்கள் லஞ்சம் பெற்றதாக ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினார். முசிறியில் மக்களின் நீண்டநாள் தேவையான பாலிடெக்னிக் கல்லூரி விரைவில் அமைத்துத் தரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து வாக்கு சேகரித்தார்.
What's Your Reaction?