இன்று மாலை தமிழக கேபினெட் மீட்டிங்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பது டவுட் ?
தலைமை செயலகத்தில் இன்று மாலை தமிழக கேபினெட் மீட்டிங் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
திமுக ஆட்சி அமைந்து ஐந்தாண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த ஆட்சியின் கடைசி கேபினெட் மீட்டிங் இன்று நடை பெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கேபினெட் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு கேபினெட் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.இந்த கூட்டம் இன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.அவருக்கு தொடர் காய்ச்சல் நீடித்து வந்ததால், உடனடியாக அவரை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் தேறியவுடன் ஓரிரு நாட்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இன்றைய கேபினெட் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் இன்றைய கேபினெட் மீட்டிங்கில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
What's Your Reaction?

