Thankar Bachan: தேர்தல் களத்தில் நான்… அரசியலுக்குள் இனிமேல்..? மனம் திறந்த தங்கர் பச்சான்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இயக்குநர் தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். பாமக வேட்பாளராக அரசியலில் களமிறங்கியது குறித்து மனம் திறந்துள்ளார்.
சென்னை: அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், களவாடிய பொழுதுகள் போன்ற தரமான படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த அவர், தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளராக கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். இதுபற்றி மனம் திறந்துள்ள அவர், நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே உறக்கம், 29 நாட்களாக கடிகாரம் என்னை துரத்திக் கொண்டேயிருந்தது. உடல் கறுத்து, தொண்டை கட்டி, கால்களில் இரத்தம் தேங்கி வீங்கியிருந்தாலும் எரியும் தீயில் நிற்கின்ற தவ வலியுடன் பரப்புரை இனிதே நிறைவு பெற்றன.
இளம் பருவத்திலிருந்து இன்றுவரை உணவிலும், உடலைப் பேணுவதிலும் அக்கறை காட்டியதன் விளைவாக பரப்புரை தடை படவேயில்லை! காலனியின்றி முந்திரித் தோப்புகளிலும், வயல் வரப்புகளிலும் அலைந்திருந்ததாலும், நாளான்றுக்கு 18 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பில் உழைத்ததினாலும் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடிந்தது. ஊர் ஊராக தெருத்தெருவாக அலைந்து மக்களை நேரடியாக சந்தித்ததுள்ளேன். இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் செய்யாததை நான் செய்தேன் என்பதை மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன்.
என் மீது பாசம், அன்பு, அக்கறை காண்பிக்க இத்தனை உறவுகளா? இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்றுவதற்காகவே அவர்களை நாடி வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்து சாதி, மதம், கட்சி பேதமின்றி எனக்கு வாக்களித்து உற்சாகப்படுத்தி வாழ்த்தி அனுப்பியுள்ள என் மக்களுக்காக எதையும் செய்யத் துணிந்துள்ளேன். மக்களே உருவாக்கும் மக்களாட்சியை அரசியல் கயவர்கள் சிதைத்து தங்களின் கைவசப்படுத்தி தேர்தல் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகின்றனர். பிழைப்புவாத கொள்ளை அரசியலை நடத்தி மக்களாட்சியின் மாண்புகளையே முற்றிலும் சீர்குலைத்துவிட்ட கட்சிகளை விரட்டியடிக்காமல் விடுதலை இல்லை என்பதை மக்கள் உணரும் காலம் நெருங்கிவிட்டது.
ஒவ்வொரு தேர்தலும் தங்களின் தேவைகள் நிறைவேறும் என நினைத்து மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். ஆறுக்கு ஆறு அடி தகரக் கூரைகளில் காலம் முழுக்க வாழ்ந்து கொண்டு வரிசையில் காத்து நின்று வாக்களித்த மக்களைச் சுரண்டி கொழுத்த கட்சிகள் அவர்களை ஆடு மாடுகள் போலவே நடத்துகின்றன. சொல்லில் அடங்காத துயரங்களை மறைத்துக்கொண்டு வியர்வையில் நனைத்து கொண்டு கதவிடுக்கின் வழியே கையசைத்து வாழ்த்து கூறிய அந்த தெய்வங்களின் முகங்கள்தான் என்னை இந்த அரசியலுக்குள் இனிமேல் இயக்கும்.
அறம் சார்ந்த நேர்மையான மக்களுக்கான அரசியலின் அத்தனை வழிகளையும் அடைத்துவிட்டு அரசியலை வியாபாரமாக்கி கொழுக்கும் கொள்ளைக் கூட்டங்களை நேர்மையான வேட்பாளர்கள் மூலமாகவே அகற்ற முடியும் எனும் உண்மையை இளைய தலைமுறையினர் விளங்கிக்கொண்டு விட்டனர். எப்பொழுதும் போல் கலை, இலக்கியம், விவசாயத்தோடு இனி அரசியலும் என்னுள் முழு மூச்சாக இயங்கும். என் வேகத்துக்கு ஈடுகொடுத்து கொடும் வெயிலில் கடமையை செவ்வெனச்செய்து என்னை பாசத்திலும், நேசத்திலும், அன்பிலும் ஆழ்த்திய பாட்டாளி உறவுகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் நன்றியினை உரித்தாக்குகிறேன் எனக் கூறியுள்ளார்.
What's Your Reaction?