தெறி vs மங்காத்தா: ஜனவரி 23 ரீ-ரிலீஸ், விஜய் அஜித் ரசிகர்கள் உற்சாகம் 

ஜனவரி 23-ம் தேதி விஜயின் தெறியும், அஜித்தின் மங்காத்தா படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தெறி vs மங்காத்தா: ஜனவரி 23 ரீ-ரிலீஸ், விஜய் அஜித் ரசிகர்கள் உற்சாகம் 
தெறி vs மங்காத்தா: ஜனவரி 23 ரீ-ரிலீஸ்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், படம் வெளியாகவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ஜனநாயகன்’ வெளியாகததால் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படம் வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

ஆனால், தற்போது தெறி ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தாணு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் படங்களில் தயாரிப்பாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, நாங்கள் ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸை ஒத்திவைத்துள்ளோம்” என தெரிவித்து இருந்தார். 

தற்போது தெறி ஜனவரி 23-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவித்துள்ளார். அதே தினத்தில் அஜித்தின் 'மங்காத்தா' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா. அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பலர் நடித்திருந்தனர்.அஜித்தின் 50-வது படமான இதில் அவர் தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற மங்காத்தா படத்தை தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்கின்றனர். 

ஜன. 23-ம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட இருப்பதாக சன்-பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதி ரீ-ரிலீஸாகும் இப்படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டது. தள்ளி வைக்கப்பட்டிருந்த தெறி, ஜனவரி 23-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow