நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்யுமா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்திய அணிக்கும் நியூஸிலாந்து அணிக்குமான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் இன்று தொடங்கிய நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்துள்ளது. 

Oct 18, 2024 - 18:54
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்யுமா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ind vs nz

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஆடுகளத்தில் தொடங்கியது. மழைகாரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறாத நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் 5 பேர் ட்க் அவுட் ஆகி 46 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியின் அதிகபட்ச ஸ்கோரே ரிஷப் பந்த் எடுத்த 20 ரன்கள் தான் என்கிற நிலையில்  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிதாகியது. வங்கதேச அணிக்கு எதிராக பெருவெற்றி பெற்று வந்த இந்திய அணி நியூசிலாந்துடன் முதல் போட்டியிலேயே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியது. 

நியூசிலாந்து அணியில் மாட் ஹென்றி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை துவம்சம் செய்தார். வில்லியம் ஓ’ரூர்கி 4 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 46 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆன நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தது. நியூசிலாந்து அணி பவுலிங்கைப் போலவே பேட்டிங்கிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.   402 ரன்கள் எடுத்து நியூசி அணி ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 157 பந்துகளில் 134 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்தபடியாக டெவான் கான்வே 91 ரன்களும், டிம் சௌதி 65 ரன்களும் எடுத்தனர். 

இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணியைக் காட்டிலும் நியூஸிலாந்து 356 ரன்கள் ரன்கள் அதிகம் எடுத்திருக்க அந்த இலக்கைத் தாண்டியும் நிறைய ரன்கள் குவிக்க வேண்டிய தேவையோடு இந்திய அணி களமிறங்கியது. 

முதல் இன்னிங்ஸுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்க களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 35 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில் விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் ஜோடி சேர்ந்தனர் பட்டையைக் கிளப்பினர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்தது.

இன்றைய ஆட்டம் முடிகிற வேளையில் விராட் கோலி 70 ரன்களில் கிளன் பிலிப்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. சர்ஃபராஸ் கான் 70 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில் இந்திய அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 125 ரன்கள் பின் தங்கியுள்ளது. வெற்றி வாய்ப்பு என்கிற இப்போதும் நியூசிலாந்து அணிக்குதான் அதிக அளவில் இருக்கிறது. நாளைக்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி நியூஸிலாந்துக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் மேலோங்கியிருக்கிறது. எப்படியும் இந்தியா இப்போட்டியை டிரா செய்து விடும் என்கிற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் இருக்கின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow