2026 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும்: தனித்து போட்டியிடுவேன்..நடிகர் விஷால்

Apr 14, 2024 - 20:15
2026 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும்: தனித்து போட்டியிடுவேன்..நடிகர் விஷால்

2026 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இருக்கும் எனவும் தனித்து போட்டியிடுவேன் எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை, வடபழநியில் நடந்த  தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசியது. "என் 25 ஆண்டுகள் கனவு நிறைவேறப்போகுது. துப்பறிவாளன் 2 மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகப் போகிறேன். வரும் 26ம் தேதி ஹரி இயக்கத்தில் நான் நடித்த ரத்னம் திரைப்படம் ரிலீஸ். இன்று ஹைதராபாத் போக வேண்டியிருந்தது. அதை தள்ளிவைத்து விட்டு வந்திருக்கிறேன். நடிகர் விஜயை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டேன். அவர் மேனேஜரை தொடர்பு கொண்டு நான் அவருக்கு கதை சொல்லணும்னு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். எதிர் தரப்பில் பதில் வரல. அவ்வளவு ஷாக். அது அப்படியே நின்றுவிட்டது" எனத் தெரிவித்தார்.


பின்னர்  விஷால் அளித்த பேட்டியில் கூறியதாவது,

கேள்வி :- நடிகர் சங்க கட்டடப் பணிகள் எப்படி போய்க்கிட்டிருக்குது உங்களின் திருமணம் எப்போது என்பதையும் சொல்லுங்கள்.

விஷால் :-
நடிகர் சங்க கட்டடம்கிறது சாதாரண விஷயமில்லை. ரொம்ப பெரிய பணி. நல்லபடியா வேலைகள் போய்க்கிட்டிருக்கு. அடுத்த வருஷம் முடிஞ்சுடும். பெரியளவுல விருது நிகழ்ச்சிகள் நடத்தணும்னா ஹைதராபாத் மாதிரியான இடங்களுக்குப் போக வேண்டியிருக்கு. இந்த கட்டடம் திறந்தாச்சுன்னா அதுலயே பிரமாண்டமான நிகழ்ச்சிகள் நடத்திக்கலாம். இதுதவிர ஒரு மெகா தியேட்டரும் இருக்கும். எந்த மாதிரியான சினிமா நிகழ்ச்சிகளையும் அதுல நடத்தலாம். தவிர சங்க உறுப்பினர்கள் வீட்டு கல்யாணங்களை இலவசமா நடத்திக்கிற மாதிரி மினி கல்யாண மண்டபமும் கட்டுறோம். 130 கார்கள் நிறுத்துற அளவுக்கு பார்க்கிங் ஏரியாவும் இருக்கு. வெளியூர்ல இருந்து சென்னைக்கு வர்றவங்க, எம்.ஜி.ஆர். சமாதிக்கு போய் பார்த்துட்டு திரும்பிப் போற மாதிரி, நடிகர் சங்க கட்டடத்தையும் வந்து பார்த்துட்டு போகணும். அந்தளவுக்கு தனித்துவமான கட்டடமா, தமிழ்நாட்டோட அடையாளமா இருக்கும். இப்போதைக்கு ரத்னம் பட ரிலீஸுக்கான வேலைகள். அடுத்து நான் இயக்கப்போற துப்பறிவாளன் 2 படத்துக்கான வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கு. நடிகர் சங்க கட்டடம் சார்ந்து நிறைய பொறுப்புகள் இருக்கு. இந்த விஷயங்களை முடிச்ச பிறகுதான் கல்யாணம் பத்தி சிந்திக்கணும்.

கேள்வி :-  ரத்னம் எப்படியான படம்?.

விஷால் :-
தாமிரபரணி நடிச்சு எட்டு வருஷம் கழிச்சு பூஜை, அடுத்த எட்டு வருஷம் கழிச்சு ரத்னம். எட்டு வருஷத்துக்கு ஒரு முறை இயக்குநர் ஹரியோட இணையுற வாய்ப்பு கிடைக்கிறதுல என்ன சந்தோஷம்னா அவரோட படங்கள் குடும்பத்தோட பார்க்கிற படமா இருக்கும்கிறது தான். தாமிரபரணி, பூஜை படங்கள் எப்படி குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி இருந்துச்சோ அதேபோல, ரத்னமும் எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்தி படுத்துற படமா இருக்கும்.'

கேள்வி :- துப்பறிவாளன் 2' எப்போ துவங்குறீங்க?.

விஷால் :-
ரத்னம் படம் ரிலீஸானதும், மே 5-ம் தேதி லண்டன்ல ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ண பிளான் பண்ணிருக்கோம். அதுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் எல்லாமும் முடிஞ்சு தயாராயிருக்கிறேன்.

கேள்வி :- 20 வருட திரைப்பயணம் கற்றுக் கொடுத்தது என்ன?.

விஷால் :-
பொறுமை. என்னடா எதுவுமே செய்யாமல் இப்படி சும்மா இருக்கிறோமே என கவலைப்படாமல் நமக்கான வாய்ப்பு வரும்வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் கற்றுக் கொண்டேன்.

கேள்வி :- புதுசா அரசியலுக்கு வர்றவங்ககிட்டே இருக்க வேண்டியது என்னென்ன?.

விஷால் :-
முன்பு சொன்ன அதே பதில் தான். பொறுமை அவசியம். உண்மையாவே மக்களுக்கு நல்லது பண்ணணும்கிற எண்ணம் வேண்டும். மீடியாவிடம் பொறுமையா பதில் சொல்லணும். 

கேள்வி :-  சென்னை லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் தொடர்ந்து அரசியலில் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் உதயநிதி, விஜய் வரிசையில் 2026 தேர்தல் பட்டியலில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான உங்கள் பெயரும் இடம் பிடிக்குமா?  லயோலோ கல்லூரி முன்னாள் மாணவர்கள் தமிழக முதலமைச்சர் ஆவாங்களா?. 

விஷால் :-
லயோலா கல்லூரியின் நிறைய மாணவர்கள் இன்று அரசியலில் இருக்கிறார்கள் என்பதை நானே இப்போதுதான் கவனிக்கிறேன். நிச்சயம் 2026-ல் இந்த பட்டியலில் இன்னும் நிறைய நபர்கள் சேர்வதற்கும் வாய்ப்புகள் அதிகம். நிச்சயம் நானும் அரசியலில் போட்டியிடுவேன். நான் முதலில் தனித்து போட்டியிடுவேன். என் பலத்தை நிரூபிப்பேன். இந்த வயதில் அடுத்தவர் தோள்பிடித்து நிற்கமாட்டேன். 

கேள்வி :- உங்களின் அரசியல் பிரவேசம் எப்போது?. 

விஷால் :-
இப்போது சமுதாய பணி மற்றும் எனது திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் இருக்கும்.

கேள்வி :- பொதுமக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?. 

விஷால் :-
மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு என்ற செய்தியை கேட்க விரும்புகிறேன். நாம் அனைவரும் எது எதற்கோ வரிசையில் இருக்கின்றோம். ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் ஜனநாயக திருவிழாவில் வரிசையில் நின்று நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 

கேள்வி :- உங்களைச் சுற்றி இருப்பவர்கள் நம்பிக்கை துரோகம் செய்யும் போது, முதுகில் குத்தும் போது உங்க மனநிலை எப்படி இருக்கும்?.

விஷால் :- அப்படி நிறைய நட ந்து இருக்குது. சங்க பணிகளில், தனிப்பட்ட வாழ்க்கையில் பலர் ஏமாற்றி இருக்கிறார்கள். துரோகம் செய்து இருக்கிறார்கள். கல்லூரி காலத்திலே காதல் தோல்வி. அப்புறம் தொழில் ரீதியாக. அப்போது உங்களுக்கு இனி விஷால் மாதிரி ஆள் கிடைக்கமாட்டான். அவனை இழந்து விட்டீர்கள் என நினைப்பேன். தவிர தோல்வி, துரோகங்களுக்கு பின் கிடைக்கும் வெற்றிக்கு ருசி அதிகம். இவ்வாறு அவர் பேசினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow