"ஸ்டாலினுக்கு தோல்வி ஜூரம்.. ஸ்டெர்லைட் பிரச்னைக்கு காரணம் திமுக".. எடப்பாடி பழனிசாமி விளாசல்
ஸ்டெர்லைட் பிரச்னையில் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு விரும்பத்தாக சம்பவத்தை உருவாக்கியது திமுக தான் என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி ஜூரம் வந்துவிட்டது. அதனால் தான் எங்கு சென்றாலும் என்னை பற்றி கீழ்த்தரமாக, அவதூறாக பேசி, அதிமுகவை திட்டமிட்டு விமர்சித்து வருகிறார். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. தங்கள் கட்சியை உடைத்து, முடக்க நினைத்தவர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்ய இடம் கொடுத்தது ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது தான். திமுக ஆட்சி காலத்தில் தான் ஸ்டெர்லைட் விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. ஆனால் அதிமுக ஆட்சியில் அந்த ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தோம். ஆலையை புதுப்பிக்க விண்ணப்பம் வந்தபோது அதை நிறுத்திவைத்து உத்தரவிடப்பட்டது. ஸ்டெர்லைட் பிரச்னையின்போது 144 தடை உத்தரவு இருந்தபோதும், அதை மீறி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஊர்வலம் நடத்தி கலவரம் உருவாக துணை நின்றார். அப்பாவி மக்களை தூண்டிவிட்டு விரும்பத்தகாத சம்பவத்தை திமுக உருவாக்கியது.
அமைச்சர் உதயநிதி எய்ம்ஸ் ஒற்றைச் செங்கலை ஊர் ஊராகச் தூக்கிச் செல்லும் நிலையில்,பல லட்சம் செங்கற்களை வைத்து கட்டப்பட்ட தலைவாசல் கால்நடை பூங்காவை திறக்காதது ஏன்? மத்தியில் ஆட்சிக்கு வர ஸ்டாலின் துடிப்பதே மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிப்பதற்குத் தான்" என விமர்சித்தார்.
What's Your Reaction?