அதிமுகவை கைப்பற்றும் டிடிவி....இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈபிஎஸ் தலையில் விழுந்த இடி!

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுக எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நீடிப்பாரா? அல்லது டி.டி.வி. தினகரன் அந்தப் பொறுப்புக்கு வருவாரா? என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 10, 2026 - 16:00
Oct 10, 2026 - 16:41
அதிமுகவை கைப்பற்றும் டிடிவி....இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈபிஎஸ் தலையில் விழுந்த இடி!

இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என்றும், டி.டி.வி. தினகரன் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்கும் சூழல் உருவாகும் என்றும் டெல்லி பாஜக தலைமை தரப்பில் ஏற்கெனவே பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், நேற்று (அக்.9) வெளியான இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், அந்தப் பேச்சு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

அண்ணாமலை சொன்ன ஆருடம்... நடக்குமா?

2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, அதிமுகவின் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் வருவார் என அன்றைய பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். ஆனால், அதன்பிறகு அப்படியொரு மாற்றம் அதிமுகவில் நடைபெறவில்லை.

இதற்கிடையே, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, "எடப்பாடி பழனிசாமியால் கட்சியை வலுவாக வழிநடத்த முடியவில்லை" என்ற விமர்சனங்கள் அக்கட்சிக்குள் அதிகரிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்தால், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்ற கோரிக்கை எதிரணியினரால் மேலும் அழுத்தமாக முன்வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தினகரனை நோக்கி நகரும் அதிமுக?

அத்தகைய சூழல் ஏற்பட்டால், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுகவை மீண்டும் அதிமுகவுடன் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாகும் என்றும் டெல்லி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசியவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

2017-ல் அதிமுகவில் இருந்து தினகரன் நீக்கப்பட்ட நிலையில், தற்போது அவரையும் அவரது தலைமையிலான அமமுகவையும் மீண்டும் அதிமுகவுடன் இணைக்கும் முயற்சி நடந்தால், அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அரசியல் திருப்பமாக இருக்கும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், பி.தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் இந்த இணைப்புக்கு ஆதரவளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கூட்டணிக்குள் வந்த அமமுக

2026 சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக தரப்பில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே அமமுகவை கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டதாகவும், அதே நேரத்தில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை கட்சிக்குள் மீண்டும் இணைத்துக்கொள்ள அவர் உறுதியாக மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தற்போது அதிமுக தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், கட்சியை முதலில் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தினகரன் தலைமையிலான அமமுகவை அதிமுகவுடன் இணைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1989-ல் நடந்தது... மீண்டும் நடக்குமா?

1989-ல் அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா மற்றும் வி.என்.ஜானகி ஆகியோர் தனித்தனி அணிகளாக தேர்தலைச் சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா தன்னுடன் இருந்த பலருக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளை வழங்கினார்.

பின்னர் இரு அணிகளும் இணைந்தபோது, ஏற்கெனவே எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அதே பொறுப்புகளில் தொடர்ந்தனர். ஜெயலலிதா அணியில் இருந்தவர்களுக்கு இணை, துணை உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அதேபோல், தற்போது அமமுகவில் இருந்து அதிமுகவுக்குத் திரும்புபவர்களுக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

டெல்லி பாஜகவின் அதிருப்தியா?

கட்சி வளர்ச்சிக்காக டெல்லி பாஜக தரப்பில் கூறப்பட்ட ஆலோசனைகளை ஏற்காமல், எடப்பாடி பழனிசாமி தனது முடிவுகளின்படி செயல்படுவது பாஜக மேலிடத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக்கிவிட்டு, அந்தப் பதவியில் டி.டி.வி. தினகரனை அமர்த்துவது குறித்து டெல்லி பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"இரு கட்சிகளும் ஒன்றாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது"

இதுகுறித்து அமமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தமிழனிடம் கேட்டபோது, "நாங்கள் இப்போதும் அண்ணன், தம்பிகளாகத்தான் இருக்கிறோம். அதிமுக மாவட்டச் செயலாளரை காவல்துறை கைது செய்தபோதுகூட, எங்கள் பொதுச்செயலாளர் நேரில் சென்று கண்டனம் தெரிவித்தார்.

அதிமுகவைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே அமமுக தொடங்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கான தேவை எழவில்லை. அதே நேரத்தில், இரு கட்சிகளும் ஒன்றாக வேண்டும் என்ற எண்ணம் இரு கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை" என்றார்.

"தொண்டர்கள் அதிமுகவை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்"

அக்டோபர் 3-ம் தேதி தாராபுரத்தில் பேசிய அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆவடி குமார், "1989-ல் அதிமுக என்ற கட்சி இரண்டு அணிகளாக இருந்தது. ஆனால், இப்போது அதிமுகவும் அமமுகவும் தனித்தனி கட்சிகளாக உள்ளன. இரு கட்சிகளும் இணைந்தாலும், நிர்வாகிகளை அவர்களுக்குரிய மரியாதையுடன் தக்கவைத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும் மேல்மட்ட நிர்வாகிகள் வேண்டுமானால் பாதை மாறிச் செல்லலாம். ஆனால், அடிமட்டத் தொண்டர்கள் ஒருபோதும் அதிமுகவை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எனவே, இரு தரப்பினரும் வழக்கம்போல ஒன்றாகப் பயணிப்போம்" என்று தெரிவித்தார்.

இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் வெடிக்கும் விவாதம்!

இந்நிலையில், இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் டி.டி.வி. தினகரன் அமர்வார் என்ற பேச்சு ஏற்கெனவே டெல்லி அரசியல் வட்டாரத்தில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான தேர்தல் முடிவுகள் அந்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும்  அதிமுக, திமுகவை விட முன்னிலையில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இடைத்தேர்தலுக்குப் பிறகு அந்த நிலை மாறி திமுக முன்னிலை பெற்றிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுத்தேர்தலில் கிடைத்த வாக்கு செல்வாக்குகூட இடைத்தேர்தலில் அதிமுகவுக்குக் கிடைக்கவில்லை என்பது கட்சிக்குள் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரத்தில் இதுதொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி நீடிப்பாரா? தினகரன் வருவாரா? அல்லது அதிமுகவில் வேறு ஏதேனும் அதிரடி மாற்றம் நடக்குமா? வரக்கூடிய நாட்கள் அதிமுகவுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow