ஐப்பசியில் ஐஸ்வர்ய கடாட்சம்...முநீஸ்வர சாஸ்திரிகள் அட்வைஸ்!
ஐப்பசி மாதத்தின் ஆன்மிக மற்றும் ஜோதிட முக்கியத்துவம், காவிரியில் துலா ஸ்நானம், கந்த சஷ்டி, அன்னாபிஷேகம், தீபாவளி மற்றும் யம தீப வழிபாடு உள்ளிட்ட சிறப்புகளையும், அவற்றால் கிடைக்கும் என நம்பப்படும் பலன்களையும் விளக்கும் ஆன்மிகப் பதிவு.
பலன் தரும் பரிகாரம்! - வி.ராம்ஜி
ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும் என்று சொல்லுவார்கள். ஐப்பசியில் ஐஸ்வர்யம் நிலைக்கும் என்ற வார்த்தையும் கிராமங்களில் இன்றைக்கும் சொல்லுவார்கள். தனம், தானியம், மண், பூமி, மனை என்பதற்கான மிக முக்கியமான மாதமாக ஐப்பசி மாதம் திகழ்கிறது!
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையான வழிபாடுகளால்,விசேஷமாகப் பார்க்கப்படுகிறது; வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்துக்கு அடுத்ததாக வருவதுதான் ஐப்பசி மாதம்! அப்பன் சிவனுக்கு உகந்த மாதமாகவும் மைந்தன் கந்தக் கடவுளுக்கு உகந்த மாதமாகவும் ஐப்பசி மாதங்களில் சிவாலயங்களிலும் முருகன் கோயில்களிலும் விழாக்கள் விமரிசையாக நடந்தேறும். விரதங்கள் அனுஷ்டித்து தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம்!
’’தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி! சூரியன் துலாம் ராசியில் புகுந்து, அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள் ஐப்பசி மாதம் என்று சொல்லப்படுகிறது.
‘‘ஐப்பசியதனிலோடு நீர்வரத்து
குன்றுமதனோடு நீருக்கு அலைதலுஞ்
சேரும். தானியமெலாம் பொன்னுக்கு
நிகரொப்ப நிற்கும் மெய்யே’’
-என்றொரு பாடல் உண்டு. அதாவது இந்த ஐப்பசி மாதத்தில் ஆற்று நீர்ப் பெருக்கு குறைந்து, நீருக்கு சற்று தட்டுப்பாடு மேலோங்கி நிற்கும். தானியங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருளும் விலை கூடுவதற்கான காலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். ஐப்பசியை துலா மாதம் என்றும் சொல்லுவோம். இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி உள்பட பல்வேறு பண்டிகைகளை கொண்டாடப்படுகிறது.
புனிதமான ஐப்பசி மாதத்தில், உலகின் அனைத்து புனித நதிகளும், தமிழகத்தின் காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம்’’ என்று முநீஸ்வர சாஸ்திரிகள் துலா மாதமான ஐப்பசி குறித்து விவரிக்கிறார்.
.
ஜோதிட ரீதியாகவும் சிறப்பான மாதமாக ஐப்பசி திகழ்கிறது. துலாம் ராசி நவக்கிரகங்களில் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த ராசியாகவும் மாதமாகவும் பார்க்கப்படுகிறது. காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே இருக்கிற ஸ்ரீரங்கம், சுக்கிர பரிகாரத் தலம் என்றும் சுக்கிர பகவான் ஆட்சி செய்யும் தலம் என்றும் சுக்கிர பரிகாரத்தலம் என்றும் போற்றப்படுகிறது. காவிரியில் நீராடி, அரங்கனை ஸேவித்தால், சுக்கிர யோகம் நிச்சயம் என்று சொல்வார்கள்.
நதி நீராடுதல் என்பதே புண்ணியம். அதிலும் அனைத்து நதிகளும் காவிரியில் சங்கமிக்கிற ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடினால் ஏழு ஜென்மங்களுக்கும் புண்ணியம் என்கிறது சாஸ்திரம். ‘துலா ஸ்நானம் ஆச்சா?’ என்று அந்தக் காலத்தில் இருந்தே ஒருவரையொருவர் கேட்டுக்கொள்பவர்கள் உண்டு. தீபாவளியன்று ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்பது போல் கேட்டுக்கொள்வார்களாம்!
தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழா, திருச்செந்தூர் முதலான அனைத்து முருகன் கோயில்களிலும் விமரிசையாக நடந்தேறும் மிக முக்கியமானதான விழா! மாதந்தோறும் சஷ்டி திதியில் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் கூட, ஐப்பசி கந்த சஷ்டியின் ஆறுநாட்களும் விரதம் மேற்கொண்டாலே, ஒருவருட சஷ்டியில் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்! அப்போது திருச்செந்தூரில் சூரசம்ஹார வைபவத்தை தரிசித்தால், நம் எதிரிகள் பலமிழப்பார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதேபோல, சிவபெருமானை ‘உலகுக்கே படியளப்பவன்’ என்று சொல்லுவோம். அதாவது உணவளிப்பவன் என்று அர்த்தம். அப்படி நமக்கு உணவிட்ட சிவலிங்கத்திருமேனியை ஆராதித்துப் போற்றும் வகையில், ஐப்பசி பெளர்ணமியில் அன்னாபிஷேகம் எனும் விழா, அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்புற நடைபெறும். ஒரு கைப்பிடி அரிசியை, சிவன் கோயிலுக்கு தானம் செய்தால், நம் வீட்டில் தனம், தானியம், ஐஸ்வர்யம் பெருகும் என்று விவரிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். அதேபோல், அன்னாபிஷேகம் செய்யப்பட்ட ஈசனிடம் இருந்து, பிரசாதமாகக் கிடைக்கிற ஒவ்வொரு பருக்கையும் நம் பிறவிப்பாவங்களைப் போக்கும் என்றும் கர்மவினைகளை அகற்றும் என்றும் சாஸ்திரம் தெரிவிக்கிறது.
சிவாலயங்களில் அன்னாபிஷேகம், முருகன் கோயில்களில் கந்தசஷ்டி, காவிரியில் புனித நீராடல் என்கிற வைபவங்களைப் போல், நம் வீட்டிலேயே கொண்டாடும் பண்டிகையாக ஐப்பசி மாதத்தில் வருவதுதான் தீபாவளி! வெளியில் கொண்டாடும் பண்டிகை, வீட்டில் இருந்து கொண்டாடும் பண்டிகை, ஆலய தரிசனம் மூலம் கொண்டாடும் பண்டிகை என வழிபாடுகள் பலவகைககளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அதேசமயம் எல்லா வழிபாடுகளும் அமைதியையும் ஆனந்தத்தையும் ஒற்றுமையையும் நிம்மதியையும் தரும் வகையில் அனுஷ்டிக்கப்படுகின்றன. உறவுகளுடனும் குடும்பத்தாருடனும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகையாக, தீபாவளித் திருநாள், இந்த ஐப்பசி மாதத்தில் வருகிறது. அப்படி ஐப்பசியில் உறவுகள் சூழக் கொண்டாடும் போது, அவரவர் ஊர்களில் விளைந்த தானியங்களை, பரஸ்பரம் வழங்கிக்கொள்வார்கள். அதை பலகாரங்களாக, பட்சணங்களாக தயாரித்து வழங்கி, தீபாவளியைக் கொண்டாடுவதற்கு இதெல்லாம்தான் காரணங்கள்!
தீபாவளித் திருநாளில், நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புகள், பட்சணங்கள் என ஐப்பசியில் வரும் தீபாவளியை வயது வித்தியாசமில்லாமல் கொண்டாடுகிறோம். புதுமணத்தம்பதி, தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகிற வழக்கமும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் ஒன்று!
தீபம் என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி. தீபத்தில் பரமாத்மாவும் நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
நம் மனதில் உள்ள இருட்டு அக இருள் என்போம். அகங்காரம், பொறாமை, தலைக்கனம், ஆணவம் என்றெல்லாம் பகைமையுடன் இருள் கவ்விய மனதில் இருந்து வெளியேற்றும் நாளாகவும் தீய குணங்களை அழிக்கும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது .
வடமாநிலங்களில் தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம் ஏற்றிப் பிரார்த்தனை செய்கிற வழக்கம் உண்டு. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி எனப்படுகிற தீபாவளி திருநாள். அடுத்து கேதார கௌரி விரதம். நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம் என்கிறோம். ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை என்று வணங்கி, யம தீபம் ஏற்றுவோம்.
ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷத்தில் வீட்டு வாசலில், தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வோம் என்பது ஐதீகம்!
யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழிலிலும் உத்தியோகத்திலும் முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கும். மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு நம் முன்னோர்கள் வந்திருப்பார்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கும் வெளிச்சம் காட்டுவதற்கும் யம தீப பிரார்த்தனை மிக மிக அவசியம் என வலியுறுத்துகிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.
What's Your Reaction?

