சோறுகண்ட இடம் சொர்க்கம் ஏன்?...பாவம் போக்கும் துலா ஸ்நானம் எப்படி?
ஐப்பசி பவுர்ணமியில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தின் சிறப்புகள், அதன் பிரசாதம் குறித்த நம்பிக்கைகள் மற்றும் காவிரியில் துலா ஸ்நானம் செய்வதால் கிடைக்கும் என்று கருதப்படும் ஆன்மிகப் பலன்களை அறிந்துகொள்ளுங்கள்.
பலன் தரும் பரிகாரம்! - வி.ராம்ஜி
’சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்பார்கள். இதை நாம் தவறான பொருளுடன் சொல்லிக் கொண்டிருக்கிறோம். உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக, ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் எனும் விழா நடைபெறுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சொல்லிவைத்தார்கள்.
தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அபிஷேகம் செய்து, ஆராதனைகள் செய்கிறோம். பெருமாள் அலங்காரப் பிரியன். சிவனோ அபிஷேகப் பிரியன். அந்த அபிஷேகங்களில் அன்னாபிஷேகமே ஆகச்சிறந்தது என்று ஆகமங்கள் தெரிவிக்கின்றன.
சமைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து காய்கறிகள்,பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுகிற வழக்கம் இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது. அன்னாபிஷேக நாளில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அந்த அன்னமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுபவர்களின் வீடுகளில், உணவுப் பஞ்சமே ஏற்படாது என்பது நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை தரிசிக்க அன்னாபிஷேகமும், அன்ன துவேஷமும் நீங்கும்.
வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது. ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது.
அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்கிறார் காஞ்சிபுரம் நடராஜ சாஸ்திரிகள்.. அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகும்; பசிப்பிணி ஏற்படாது என்கிறார்கள்.
பாவம் போக்கும் துலா ஸ்நானம்!
ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால் காவிரியில் ஐப்பசி மாதத்தில் நீராடுவது மகா புண்ணியம். இதை துலா ஸ்நானம் என்கிறோம்.
துலா ஸ்நானம் நிகழ்வு, ஸ்ரீரங்கத்திலும் மயிலாடுதுறையிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காவிரியில் துலா ஸ்நானம் செய்வதால் நம்முடைய மற்றும் நம்முடைய முன்னோர்களின் பாவங்கள் நீங்குகின்றன.
அழகு, ஆரோக்கியம், உடல்நலம், செல்வம், கல்வி, வலிமை, குழந்தைப்பேறு ஆகியவற்றை துலா ஸ்நானம் தருவதாகக் கருதப்படுகிறது. ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையில் காவிரி நீராடல் கடைமுழுக்கு என்றழைக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்வது ரொம்பவே விசேஷம். காலை சூரிய உதயத்துக்கு முன் பிரம்ம முகூர்த்தத்தில் ஸ்நானம் செய்தல் இன்னும் உன்னதம்! இந்த மாதத்தில் 63 கோடி புண்ணிய தீர்த்தங்கள் 14 லோகத்தில் இருந்து இந்த பூலோகத்தில் காவிரியில் கலந்து விடுவதாக காவிரி மகாத்மியம் விவரிக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாபங்கள் அனைத்தும் இந்த காவேரியில் ஸ்நானம் செய்யும் போது விடுபடுகிறது.
துலா மாதத்தில் கங்கை தன்னிடம் சேரும் பாபங்களை போக்கிக் கொள்ள கர்நாடகாவில் உள்ள (தக்ஷிணகங்கா) ப்ரஹ்மகிரி மலையடிவாரத்தில் இருந்து நம் தமிழ்நாட்டில் காவிரியில் வந்து கலப்பதாக கங்கைப் புராணம் விவரிக்கிறது. 100 நாட்கள் கங்கையில் குளித்த பலன் 3 நாட்கள் இந்த துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்தால் கிடைக்கும் என்கிறார் நடராஜ சாஸ்திரிகள். ஸ்நானம் முடித்தவுடன் அவரவர்கள் தங்களால் முடிந்த தானங்கள் செய்தால் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
What's Your Reaction?

