இன்று வாஸ்து நாள்.. வாஸ்து தோஷம் நீக்கும் கள்ளழகர் கோவில் நூபுர கங்கை தீர்த்தம்

இன்றைய தினம் வாஸ்து நாள். சித்திரையில் வீடு கட்ட வாஸ்து செய்தால் ஐப்பசியில் குடியேறலாம் என்பது நம்பிக்கை. அழகர்மலையில் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் வீடு, கட்டிடங்களில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Apr 23, 2024 - 12:28
இன்று வாஸ்து நாள்.. வாஸ்து தோஷம் நீக்கும் கள்ளழகர் கோவில் நூபுர கங்கை தீர்த்தம்

மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். நல்ல மனை அமைவதும் அப்படித்தான்.  மனை வாஸ்துப்படி அமைய வேண்டும். கட்டிடம் கட்ட சரியான முறையில் வாஸ்து செய்ய வேண்டும். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.

இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். இந்த நாட்களில் வாஸ்து பகவான் மூன்றே முக்கால் நாழிகை வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். அதாவது ஒன்றரை மணி நேரம் வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார்.

 இந்த ஒன்றரை மணி நேரத்தில் முதல் 18 நிமிடங்கள் காலைக் கடன்களை முடித்து குளிப்பார். அடுத்த 18 நிமிடங்கள் பூஜை செய்வார். அதற்கு அடுத்த 18 நிமிடங்கள் சாப்பிடுவார். பின்னர் 18 நிமிடங்கள் வெற்றிலை பாக்குப் போடுவார். கடைசி 18 நிமிடங்கள் ஆட்சி செய்வார். இந்த நேரத்தில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும். இந்தத் தேதிகளில், கிழமைகள் மாறுபட்டு வந்தாலும்,  இந்தத் தேதிகள் மாறுவதில்லை.

யார் இந்த வாஸ்து புருஷன்:  நாம் கடை, மண்டபம், வீடு, பொது கட்டிடங்கள் மற்றும் ஆலயங்கள் கட்டும்போது சிலர் வாஸ்து சாஸ்திரம் பார்க்கின்றோம். சிலர் பார்க்காமலையே இறைவனை பிரார்த்தித்து கட்டிட பணிகளை துவங்குகின்றோம். ஆனால் யார் இந்த வாஸ்து புருஷன் என்று தெரியுமா. அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. 

பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், “இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்,” என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.

வளம் தரும் வாஸ்து நாளில் பூஜை: வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்கள் மற்றும் வாஸ்து நேரங்களை அறிந்து, நம் வீட்டைக் காக்கும் தெய்வமான வாஸ்து பகவானை வாஸ்து நாளில் வணங்கி பூஜை செய்து வீடு முதலான புதிய கட்டடங்களைக் கட்டத் துவங்க வேண்டும். அப்படி செய்யும் பொழுது மனைகளில் உள்ள குறைபாடுகள், தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வாஸ்து பகவானின் திருவருளை பெறலாம்.

எந்த நேரத்தில் வழிபடலாம்: வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம்.

சித்திரை 10 இன்று வாஸ்து நாள்: இன்று செவ்வாய்கிழ்மை 23.04.2024 செவ்வாய்கிழமை வாஸ்து நாளான இன்று பூஜை செய்து கட்டடம் கட்டத் தொடங்கினால் ஐப்பசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறலாம் என்பது நம்பிக்கை. 
வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். அவ்வாறு செய்யும் நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது. வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை.

நல்ல நாட்களில் பூமி பூஜை: ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம் திருவோணம், சதயம், உத்திரட்டாதி,ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் கூடிய நாட்களில், துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் கூடிய நாட்களில் பூமி பூஜை செய்யலாம்.

வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்: ஒரு சிலர் கட்டி முடித்த வீடு கட்டிடங்களில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டில் வாயிலாக சரி செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட வாஸ்து தோசம் நீங்கும்.

ராகு காலத்தில் ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம். திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதாக உறுதியாக தெரிய வந்தால், அதை தீர்க்க எளிய வழி உள்ளது. உங்கள் வீட்டுத் தலைவாசல் நிலையின் நீளம், அகலத்தை அளந்து கொள்ளுங்கள். அந்த அளவிற்கு அறுகம்புல் மாலையை நிலையில் மாட்டுங்கள் அதே போல மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருக்க, நீள அளவுக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.

நிலையில் சூட்டப்பட்ட அறுகம்புல் மாலையும், மகாலட்சுமிக்காகச் சூட்டப்பட்ட வெற்றிலை மாலையையும் மறுநாள் காலை கழற்றி மூன்றுபடி தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அறுகம்புல் மாலை மற்றும் வெற்றிலை மாலையில் பட்ட தண்ணீரை உங்கள் விட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்துவிடுங்கள்.

வீட்டின் வெளிப்புறத்திலும் தெளியுங்கள். பிறகு, அறுகம்புல் மாலையையும், வெற்றிலை மாலையையும் ஒரு வெள்ளைத்துணியில் முடித்து ஆற்றில் போட்டு விடுங்கள். வாஸ்து தோஷம் விலகிவிடும். 

வீட்டில் வாஸ்து குறை நீக்கும் ஸ்லோகம்: 

ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

வீட்டில் வாஸ்து குறை இருந்தால் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை உச்சரிக்க தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. பௌர்ணமி நாளில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும். கள்ளழகருக்கு அபிஷேகம் செய்ய பயன்படும் நூபுர கங்கை தீர்த்தத்தை வீட்டிற்கு கொண்டு வந்து நான்கு திசைகளிலும் தெளிக்க வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow