முன்னாள் அமைச்சருக்கு இப்படியொரு நிலைமையா? ஆள் அட்ரஸே தெரியாமல்..காணாமல் போன அனிதா!

திமுகவின் முக்கிய நிர்வாகியான அனிதா ராதாகிருஷ்ணன், சமீபகாலமாக அரசியல் நிகழ்ச்சிகளில் தென்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அவர் எங்கே இருக்கிறார்? அரசியலில் இருந்து ஒதுங்கியதன் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

Oct 30, 2026 - 13:26
முன்னாள் அமைச்சருக்கு இப்படியொரு நிலைமையா? ஆள் அட்ரஸே தெரியாமல்..காணாமல் போன அனிதா!
Anitha Radhakrishnan

தமிழ்நாடு அரசியல் களத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக வலம் வந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். குறிப்பாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அரசியலில் முக்கியச் செல்வாக்கைக் கொண்டிருந்த இவர், திருச்செந்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர். 

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் விஜய்யையும், அரசின் செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால், தற்போது அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. என்ன ஆனது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு? மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறாரா? அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா? பார்க்கலாம்.

அரசியல் களத்தில் ஆக்டிவாக இருந்த அனிதா!

அதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அனிதா ராதாகிருஷ்ணன், பின்னர் திமுகவில் இணைந்து முக்கியப் பொறுப்புகளைப் பெற்றார். 2001-ம் ஆண்டு முதல் திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து தேர்தல் வெற்றிகளைப் பதிவு செய்து வந்தவர். அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

குறிப்பாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக தோல்வியை சந்தித்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், புதிய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துகளை முன்வைத்து வந்தார்.

முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள், அரசின் அறிவிப்புகள் எனப் பல்வேறு விவகாரங்களில் விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்று தவெக அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.

முதலமைச்சர் விஜய் குறித்த பேச்சு... கைதான அனிதா!

இதற்கிடையே, கடந்த ஜூன் 20-ம் தேதி திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாகவும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் கருத்துக்களைத் தெரிவித்தாக சர்ச்சைகள் எழுந்தன.

 இது தொடர்பாக தவெக நிர்வாகி ஆத்தூர் நகரச் செயலாளர் செல்வம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய அனிதா ராதாகிருஷ்ணனின் மனு, கடந்த ஜூலை 3-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து அன்றே ஆத்தூர் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையுடன் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும், 10 நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டது.

கைது நடவடிக்கைக்குப் பிறகும் தவெக அரசுக்கு எதிராக அவர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

70 வயது உச்சவரம்பு... அனிதாவுக்கு வந்த சிக்கல்!

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கான வயது உச்சவரம்பு தொடர்பாக முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மாவட்டச் செயலாளர் பதவிக்கான அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஒருவர் அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்க முடியும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அப்போது 74 வயதாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனும் இந்த வயது வரம்புக்குள் வந்தார். இதனால் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் இந்தப் புதிய விதிகளால் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவானது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகளும் கட்சிக்குள் பேசுபொருளாகின.

70 நாட்களாக வீட்டிலேயே முடக்கமா?

இந்தச் சூழலில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்து சொந்த ஊர் திரும்பிய பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தென்படவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சுமார் 70 நாட்களாக அவர் வீட்டிலேயே இருப்பதாகவும், கட்சி நிகழ்ச்சிகளில் முன்புபோல் பங்கேற்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் அவரது செயல்பாடுகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுவது கட்சியினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறாரா?

திமுகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் மதுரையில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததாகக் கூறப்படும் நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் பங்கேற்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

இதற்கிடையே, மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அவர் விலகப் போகிறாரா அல்லது கட்சித் தலைமை அவருக்கு வேறு பொறுப்பை வழங்கப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

மேலும், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவர் ஓய்வில் இருப்பதாகவும், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தி வருவதாகவும் சில தகவல்கள் உலா வருகின்றன. 

தேர்தல் செலவு... கடன் நெருக்கடியா?

மற்றொரு பக்கம், தேர்தல் செலவுகளுக்காக அதிக அளவில் கடன் வாங்கியதாகவும், கட்சி நிர்வாகிகளிடமே கடன் வாங்கியதாகவும் அதனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் பேசப்படுகின்றன. 

ஆக, வயது உச்சவரம்பு தொடர்பான கட்சியின் புதிய விதிகள், மாவட்ட அமைப்பு மறுசீரமைப்பு, உடல்நல ஓய்வு குறித்த தகவல்கள் எனப் பல்வேறு காரணங்கள் அனிதா ராதாகிருஷ்ணனின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இத்தனை ஆண்டுகளாகத் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அரசியலில் முக்கியப் பொறுப்பில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இனி என்ன முடிவெடுக்கப் போகிறார்? மாவட்டச் செயலாளர் பதவியில் தொடர்வாரா அல்லது அரசியல் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்வாரா? இதற்கான தெளிவான பதில் அவரது அடுத்தகட்ட நகர்வில்தான் தெரியவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow