விஜய்யுடன் நட்டியை ஒப்பிட்டு பேசிய பேரரசு.. ஏன் தெரியுமா?
’சீசா’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் திரைப்பிரபலங்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சீசா’. நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சரண் குமார் இசையமைக்க பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ‘சீசா’ திரைப்படம் வரும் ஜனவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல், தயாரிப்பாளர் கே.ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசுகையில், திரையுலகில் வாரிசு என்று இருக்கு. அரசியலில் வாரிசு ஜெயிப்பது ஈஸி, பணம் இருந்தால் போதும். ஆனால், திரையுலகில் வாரிகள் ஜெயிக்க திறமை வேண்டும். அறிமுகம் எளிமையாக இருக்கும், ஆனால் நிலைத்து நிற்க திறமை தான் வேண்டும். கஸ்தூரி ராஜா சாரின் மகன்கள் என்பதால் செல்வராகவன் இயக்குநராகவும், தனுஷ் நடிகராகவும் அறிமுகம் ஆகலாம். ஆனால், அவர்கள் இன்று முன்னணியில் இருப்பதற்கு அவர்களின் திறமை தான் காரணம்.
அதேபோல், திறமை மட்டும் போதாது ஜெயிக்க வேண்டும் என்ற வெறி வேண்டும். ஒரு படம், இரண்டு படங்களுக்கு பிறகு அப்பா பெயரை மறந்துவிட்டு, நம்ம ஜெயிக்க வேண்டும், பெரிய இடத்துக்கு போக வேண்டும் என்ற வெறி வேண்டும். அந்த வெறி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். அதனால், சினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது சாதாரண விஷயம் இல்லை, அப்படிப்பட்ட இரண்டு பேரை கொடுத்த கஸ்தூரி ராஜாவிற்கு நன்றி.
சீசா என்பது ஒரு விளையாட்டு, அது அனைவருக்கும் தெரியும். நிறைய பூங்காக்களில் சீசா இருக்கும். விளையாட்டுக்களிலேயே சிறந்த விளையாட்டு சீசா தான். மற்ற விளையாட்டுகளில் தோற்பவர்களை பார்த்து ரசிப்பார்கள். ஆனால், இந்த விளையாட்டில் தோற்பவரை பார்த்து வெற்றி பெற்றவர் ரசிப்பர். அதே சமயம், வெற்றி பெற்றவர் தோற்பார், ஏறும், இறங்கும். அப்படிப்பட்ட விளையாட்டின் பெயரை தலைப்பாக வைத்து இயக்குநராக அறிமுகமாகும் குணாவுக்கு இனி எல்லாமே ஏற்றம் தான். அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் கடவுள் பக்தி.
இயக்குநராக முயற்சிக்கும் போது, ஒரு தயாரிப்பாளரை சந்தித்து கதை சொல்லி, அவரை பல வருடங்களாக பின் தொடர்ந்து வாய்ப்பு பெற்று படம் செய்தால் அது முயற்சி. ஆனால், எங்கேயோ இருக்கும் டாக்டர் செந்தில் வேலனை ஒரு நோயாளியாக சந்திக்க, இவரைப் பற்றி அவர் விசாரித்து தெரிந்துக்கொண்டதோடு அல்லாமல் அவருக்காக படம் தயாரிக்க முன் வந்திருக்கிறார் என்றால் இது முயற்சி அல்ல கடவுள் செயல்.
படத்தின் கதாநாயகன் நட்டி சாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை ஒப்பிட்டு சொல்லலாம். விஜய் சாருக்கு சம்பளம் 100 கோடி, 200 கோடி என்று சொல்கிறார்கள், அந்த சம்பளத்தை விட்டுவிட்டு அவர் இன்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அதுபோல் தான் நட்டியும். அவர் பெரிய கேமராமேன், அவர் இந்தி சினிமாவுக்கு சென்றால் அவருக்கு பல கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், அதை விட்டுவிட்டு நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் நடிக்க வந்திருக்கிறார்.
இன்றும் 5 கோடி ரூபாய் கொடுத்து ஒளிப்பதிவு செய்ய கூப்பிட்டாலும், 50 லட்சம் ரூபாய் கொடுத்து நடிக்க கூப்பிட்டால் அதுக்கு தான் போகிறார். என்னடா மனுஷன் இவ்வளவு வாய்ப்புகளை விட்டுவிட்டு நடிக்க வருகிறாரே, என்று யோசித்திருக்கிறேன். பிறகு தான் தெரிந்தது அவரது மனசுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். வெறும் பணத்தை மட்டுமே பார்க்காமல் மனதுக்கு பிடித்த விசயத்தை செய்ய வேண்டும் என்பதால் அவர் தொடர்ந்து நடிக்கிறார் என்று கூறினார்.
What's Your Reaction?