மீண்டும் கதாநாயகனான சூரி.. முன்னணி இயக்குநருடன் கூட்டணி

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

Dec 17, 2024 - 21:49
மீண்டும் கதாநாயகனான சூரி.. முன்னணி இயக்குநருடன் கூட்டணி
மாமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமான சூரி தன் திறமையால் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெற்றி மாறன் இயக்கத்தில் இவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

முதல் பாகம் சூரியை மையமாக வைத்து நகர்ந்த நிலையில் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை மையமாக வைத்து நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகம் போன்று இல்லாமல் இரண்டாம் பாகம் வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறியதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இளையராஜாவின் இசையை ரசிக்கவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூரி அடுத்ததாக 'விலங்கு’ வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் ’மாமன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். மேலும், நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். Lark Studios சார்பில் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹேசம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

’மாமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படத்தை சூரி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'கருடன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு Lark Studios தயாரிப்பில்,  சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow