போதைப் பொருள் கடத்தல்: தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு... திமுகவை வறுத்தெடுத்த இபிஎஸ்
போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 12-ம் தேதி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் - இபிஎஸ்
போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் அவர்களது செல்வாக்கை பயன்படுத்தி தப்பிவிடுவதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி, கல்லூரி உட்பட தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக வேதனை தெரிவித்தார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர்சாதிக், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து முதலமைச்சர் ஏன் விளக்கம் அளிக்கவில்லை என வினவியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக சாடிய எடப்பாடி பழனிசாமி, போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 12-ம் தேதி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
38 திமுக எம்பிக்கள் இருந்தும் பயன் இல்லை என்றும், அவர்கள் தமிழகத்திற்காக ஒரு நாளாவது நாடாளுமன்றத்தை முடக்கினார்களா? எனவும் கேள்வி எழுப்பினார். மேகதாது அணைக்கு இன்று வரை தடைபெற திமுக முயற்சிக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், மக்கள் நலனை விட திமுகவிற்கு கூட்டணி தர்மம் தான் முக்கியம் என கடுமையாக சாடினார்.
அண்மை காலமாக போதைப்பொருள் புழக்கம் குறித்து திமுக - அதிமுக இடையே வார்த்தைப் போர் இருந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?