செலக்டிவ் அம்னீஷியாவில் அண்ணா அறிவாலயம்... அண்ணாமலை விமர்சனம்...
முதலமைச்சர், ஆர்.எஸ்.பாரதி உள்பட திமுகவில் உள்ள பலருக்கும் செலக்டிவ் அம்னிசியா இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான 300 ரூபாய் சிலிண்டர் மானியம், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த சிலிண்டருக்கு 100 ரூபாய் என்னவானது என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவினருக்கு பிரதமரை பாராட்ட மனமில்லை என்று சாடினார்.
கட்சியில் ஜாபர் சாதிக் அயலக பொறுப்பில் இருந்ததை குறித்து இதுவரை திமுக வாயை திறக்காதது மர்மமாக உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார். ஜாபர் சாதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கிய அமைச்சர் உதயநிதி, இதற்கு விளக்கம் அளிக்காமல் அண்ணா அறிவாலயம் அமைதி காப்பது ஏன் எனவும் அண்ணாமலை வினவினார்.
DMK Files-ல் 2ஜி தொடர்பான டேப்புகளில் இருப்பது தம்முடைய குரல் அல்ல என ஆ.ராசா கூறினால், அரசியலில் இருந்து விலக தயார் என்றும் அண்ணாமலை சவால் விடுத்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, வாக்குறுதிகளை மறந்து சுற்றித்திரியும் திமுகவினர், தங்கள் மீதுமுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்திருக்கிறார்.
What's Your Reaction?