'ஜனநாயகன்' திரைப்படம்....குமுதம் விமர்சனக் குழு.....!
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் மாஸ், அரசியல், ஆக்ஷன், உணர்ச்சி என அனைத்தையும் கலந்த கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது. படம் குறித்தான விமர்சனத்தை காண்போம்.
அம்மாவின் கடைசி ஆசையை ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற வளர்ப்பு மகளின் கனவை நனவாக்க வேண்டும்... தீய அரசியல் சக்திகளிடமிருந்து மாநிலத்தைக் காக்க வேண்டும். தீவிரவாதிகளிடமிருந்து தேசத்தைக் காப்பாற்ற வேண்டும்... எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். இப்படி பல பொறுப்புகளைச் சுமக்கும் கனமான கதாபாத்திரத்தில் முதல்வர் விஜய்யைப் பார்ப்பது முற்றிலும் வித்தியாசமான அனுபவம்.
சிறைக்குள் கும்பலாக ரவுடிகள் நடத்தும் அராஜகத்தை சிங்கிளாக ஹாண்டில் பண்ணும் விஜய் யார், ரவுடியா, போலீஸா, புரட்சிக்காரனா எனப் பல கேள்வி களுடன் பல்ஸை எகிற வைக்கும் விதத்தில் ஆரம்பிக்கும் படம். தளபதியின் பட்டயைக் கிளப்பும் நடிப்பு,சுளிர் அரசியல், சூப்பர் டான்ஸ், வெட்கப் படாத காதல்,வெறித்தனமான ஃபைட் எனக் காட்சிக்குக் காட்சி ரசிகர்களை உணர்ச்சியின் உச்சத்தில் நிறுத்து கிறது. அனைத்திற்கும் சிகரமாக அனிருத்தின் இசை ஆர்ப்பாட்டம், கொண்டாட்டம்!
விஜய்யின் அம்மாவாக வரும் ரேவதி, மகளாக வரும் மமிதா பைஜு காதலியாக வரும் பூஜா ஹெக்டே நியாயமான போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன், கொடூர வில்லன் பாபி தியோல், அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் என முக்கியமான கேரக்டர்களில் நடித்த அனைவருமே நடிப்பில் சிகரங்கள். இவர்களைத் தவிர, பிரியாமணி, நரேன், சுனில் கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிர்தீப் ஈ ராகவ் ஆக்ஷன் அனல் அரசு என அனைவருமே கடுமையாக உழைத்திருக்கின்றனர். மமிதா பைஜுவின் க்ளைமாக்ஸ் ஃபைட் வேற லெவல்! சேகர் வி.ஜே. மற்றும் சுதன் நடன அமைப்புகள் நச்!
ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் விஜய்யின் மாஸ் வேற லெவல். தமிழ்நாட்டின் கழக அரசியலை மட்டுமின்றி உலக அரசியலை அவர் விளக்கும் விதம் அருமை! அந்த வேர்க்கடலைக் காட்சியில் விசில் பறக்கிறது. கள்ளச்சாராய சாவுகள் காட்சிப்படுத்திய விதம் சுறுக். அதில் வரும் ரெபேக்கா கேரக்டர் நெருப்பு. கொடிக் கம்பத்தில் அவரது மகளின் உடைகளைப் பறக்கவிடும் இயக்குநரின் கற்பனை பளீர்... குடும்ப அரசியலை நேரடியாகக் குத்திக் கிழிக்கும் காட்சிகள், வசனங்கள் படு ஷார்ப்!
படத்தில் யோகிபாபு இல்லாதது ஒன்றுதான் சின்ன குறை... அதனால் காமெடியில் கொஞ்சம் வறட்சி. ஆப்பிரிக்க நாட்டின் அதிபரையே தூக்கில் தொங்கவிடும் வில்லன், மமிதா பைஜுவிடம் அடிவாங்கிச் சாவதெல்லாம் காமெடி போல்தான் தெரிகிறது. ஆப்பிரிக்காவின் அரசியல் கலவரம், கப்பல் ஃபைட் ரோபோ ஆர்மி எல்லாம் பிரமாண்டமாக இருந்தாலும், கதையோடு இயல்பாக ஒட்டவில்லை. மதவெறி மற்றும் மத ஒற்றுமை பற்றி விளக்கும் காட்சிகள் ஓவர்டோஸ்..!
'ஜனநாயகன்' - தளபதி..!
What's Your Reaction?

