Hairstyle-ஐ மாற்றிய மேயர் பிரியா... அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகள்... ஆதரவாக களமிறங்கிய கனிமொழி..!

மேயர் பிரியாவின் முடிவெட்டு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sep 26, 2026 - 15:04
Sep 26, 2026 - 15:16
Hairstyle-ஐ மாற்றிய மேயர் பிரியா... அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகள்... ஆதரவாக களமிறங்கிய கனிமொழி..!
Haircut Controversy

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நேற்று (செப். 25) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் மேயர் பிரியா கடுமையாக விமர்சித்தார். இதனிடையே அவர் முடி வெட்டிக்கொண்டது குறித்து சமூக ஊடகங்களில் சிலர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மேயர் பிரியா தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஏன் எனக்கு மட்டும் எப்போதும் இது நடக்கிறது? முதல் நாளிலிருந்து தற்போதுவரை, நான் எது செய்தாலும் அது சர்ச்சையாகிறது. அது சிறிய பிரச்னையாக இருந்தாலும் கூட பெரிதாகிறது.

நான் பர்கர் சாப்பிட்டாலும் பிரச்னை ஆகிறது. நான் முடி வெட்டிக்கொண்டாலும் பிரச்னை ஆகிறது. நான் எடுக்கும் என்னுடைய தனிப்பட்ட விருப்பங்கள்கூட கேள்விக்குட்படுத்தப்பட்டு அவை ஆராயப்படுவதாகத் தெரிகிறது.

நான் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலோதான் இப்படி நடக்கிறதோ என்று சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது. நான் சார்ந்த பிரச்னைகளில் மட்டும், பெண்ணியவாதிகளும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்பவர்களும் எங்கே மறைந்துவிடுகிறார்கள் என்பது தெரியவில்லை.

அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்குத் தகுதியற்றவர்களோ அல்ல. பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணை அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கே உரிய கண்ணியமும் சுயமரியாதையும் தன்னுடைய வாழ்க்கையை தனது விருப்பப்படி அமைத்துக் கொள்ளும் உரிமையும் உண்டு. எனவே, மேயர் என்ற பதவியைத் தாண்டி பெண்ணையாய் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மேயர் பிரியா முடிவெட்டு குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் மேயர் பிரயாவுக்கு ஆதரவாக பதிவை ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில், பொது வாழ்க்கையில் பெண்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தொடர்ந்து விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாக்கப்படக் கூடாது. ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் அரசியலுக்குள் நுழைவதே கடினமான ஒன்று; அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் கால்பதிப்பது இன்னும் சவாலானது. இப்படிப்பட்ட தடைகளைத் தாண்டி முன்னேறும் பெண்களை குறிவைத்து தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேயர் திருமதி பிரியா ராஜன் மீது தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்படும் இந்த சர்ச்சைகளுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

“எந்தப் பெண்ணைப் பற்றியும் யாரும் தவறாகப் பேசுவதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று முதலமைச்சர் விஜய் கூறுகிறார். அப்படியிருக்க, மேயர் பிரியா ராஜனை அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் குறிவைத்து நடத்தும் இந்தத் தாக்குதல்களுக்கு அவர் ஏன் அனுமதித்துள்ளார்? என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow