செந்தில் பாலாஜி ஜாமின் மனு- அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார்.

Jan 3, 2024 - 13:08
Jan 3, 2024 - 19:57
செந்தில் பாலாஜி ஜாமின் மனு- அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பெற்ற பணத்தை, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் என 3 ஆயிரம் பக்கத்திலான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பெரிய பெட்டியில் கொண்டுவந்து தாக்கல் செய்தனர். 

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 13வது முறையாக நீட்டித்த நீதிபதி எஸ்.அல்லி, ஜனவரி 4 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றமும் ஜாமினை தள்ளுபடி செய்த நிலையில், உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உடல் நிலை காரணங்களை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க முடியாது என்றும், விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படியும் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு எதிராக ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம் கேட்டதை அடுத்து ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow