இளையராஜா, ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா...உள்ளத்தை மீட்டும் ‘ஊரெல்லாம் உன் பாட்டுதான்..!

‘ஊரெல்லாம் உன் பாட்டுதான்’ பாடலை வாலியின் வரிகள், ஸ்வர்ணலதா–ஜேசுதாஸ்–இளையராஜாவின் குரல்கள், இளையராஜாவின் இசை என மூன்று விதமான அனுபவங்களில் ரசிக்கும் ஒரு ரசிகனின் நெகிழ்ச்சியான இசை நினைவாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.

Oct 8, 2026 - 19:00
இளையராஜா, ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா...உள்ளத்தை மீட்டும் ‘ஊரெல்லாம் உன் பாட்டுதான்..!

படம் அவுட்டு... பாட்டு ஹிட்டு! - வி.ராம்ஜி

சில படங்கள் கதை இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும். கதை என்பதே நமக்குப் புரியாதபடி எடுக்கப்பட்டிருக்கும். கதையெல்லாம் புரிந்து நடித்திருக்கவேண்டாமா என்று கோபம் கூட வரும். உசுரைக் கொடுத்து போட்டுருக்கான், அதை உருப்படியா எடுக்கவேணாமா என ஆத்திரமும் வரும். ஒருமண் உருளையில் கொஞ்சம்கொஞ்சமாக பானையாக வரும் நேரத்தில், பானைக்குள் கையைவிட்டு, மண்ணாகவே ஆக்கிவிட்டதைப் பார்க்கும்போது அழுகையே வந்துவிடும்.

ஆனால் ‘மன்னிக்கிறவன் பெரியமனுஷன்’ என்று கமல் சொல்லித்தருவதற்கு முன்பே, யாரோ சொல்லி, யார்யாரையோ மன்னித்துவிட்டோம்; மன்னித்தோம்; மன்னித்துக்கொண்டே இருக்கிறோம்! ‘ஊரெல்லாம் உன் பாட்டு’ என்ற படத்தின் ‘ஊரெல்லாம் உன் பாட்டுதான்’ பாடல் அப்படித்தான் பலரை மன்னிக்கவைத்தது; நம் உயிரைத் தொட்டு, ஆசுவாசப்படுத்தி, நம்மையே மறக்கவைத்தது!

தொந்நூறுகளில் வந்தது ‘ஊரெல்லாம் உன் பாட்டு!’ . ராமராஜன், ஐஸ்வர்யா, நந்தினி என ஏகப்பட்டபேர் நடித்தார்கள். சிராஜ் இயக்கினார். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்துக்குப் பிறகு, ராமராஜன் உண்மையிலேயே ‘மக்கள் நாயகன்’ என்றுதான் இருந்தார். அதற்கெல்லாம் காரணம்... இசையின் நாயகன் இளையராஜா!
‘முதல் நாள், முதல் ரிலீஸ்... கமல் படம் பாத்திருவேன்’, ‘ரஜினி படம் பாத்திருவேன்’, ‘விஜயகாந்த் படம் வருதுன்னா, முதல் ஆளா தியேட்டர்ல நிப்பேன்’ என்று சொல்லும் ரசிகர்கள், மோகனுக்கு, பிரபுவுக்கு, கார்த்திக்கிற்கு, சத்யராஜூக்கு, முரளிக்கு என்று இன்னும் பல நடிகர்களுக்கு பெருங்கூட்டமெல்லாம் இருந்தது. இவற்றையெல்லாம் கடந்து, ‘எவன் நடிச்சாலும் யாரு டைரக்ட் பண்ணிருந்தாலும் இளையராஜா இசைல படம் ரிலீஸ்னா, முத ஆளா போயிருவேன், முதல் ஷோவை பாத்திருவேன்’ என்று ஒட்டுமொத்த நடிகர்களின் ரசிகர்களும் ஒட்டுமொத்தமாக சங்கல்பம் செய்துகொண்டு, படம் பார்த்தார்கள்.
அந்த கோடிக்கணக்கான பேரில், லட்சக்கணக்கான பேரில், ஆயிரக்கணக்கான பேரில், நூற்றுக்கணக்கான பேரில் நானும் ஒருவன் என்பதை காலர் தூக்கி, நெஞ்சு நிமிர்த்தி, ‘கெத்’தாகச் சொல்லிக் கொள்கிறேன்!
 
திருச்சி ஊர்வசி தியேட்டரில் 1991ஆம் ஆண்டு, இந்தப் படம் வெளியானது. அதுவொரு ஆங்கிலப் புத்தாண்டின் முதல்நாள் என்பது நன்றாக நினைவிருக்கிறது. சத்திரம் பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில், சாலையோரத்துக்கு அருகிலேயே ரம்பா என்றொரு தியேட்டர், ஊர்வசி என்றொரு தியேட்டர். ஒரே காம்ப்ளக்ஸ். ஆனால் இரண்டு தியேட்டர்கள் முகப்பிலும் ராகதேவன் இளையராஜா, இசைஞானி இளையராஜா என்று பல எக்ஸ்பிரஷன்கள் தந்து, எங்களை வரவேற்றுக்கொண்டிருந்த பேனர்களை கண்டும் ராஜாவின் முகத்தைப் பார்த்தும் சிலிர்த்தவர்கள் நாங்கள்!
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலாக, படத்தின் டைட்டிலில் ‘இசை’ என்று வரும்போது, இளையராஜாவுக்காகத்தான் மிகப்பெரிய கைத்தட்டல்களும் விசில்களும் பறந்தன என்பதை எந்தக் கோயிலில் வேண்டுமானாலும் சத்தியம் செய்து சொல்லுவேன்.
 
கவிஞர் வாலி எழுதிய பாடல். அதுவும் இளையராஜாவைக் கொண்டாடும் விதமாகவே அமைந்த வரிகள். இதெல்லாம், ஸ்ரீரங்கத்து வாலிக்கு, பெருமாள் கோயிலின் அக்கார அடிசில் சாப்பிடுவது மாதிரி! முதலில் வரிகளையும் வரிகளில் உள்ள ஜீவன்களையும் பார்ப்போம்.
ஆலாபனையுடன் பாடல் தொடங்கும். பிறகு அந்த ஆலாபன, கொஞ்சலாக வரும்போது, கிடாரும் தபேலாவும் சேரும். பிறகு தபேலா மட்டும் சங்கதி சொல்லிக்கொண்டே இருக்கும். வயலின் நடுநடுவே இழையும்.

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேரெது…
நீயெனை சேரும் நாளெது…ஓஹோ..

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

அடுத்து வயலின், கிடார், புல்லாங்குழல் ஏதோ பேசிக்கொள்ளும். அதையெல்லாம் வரிகள்தான் நமக்கு உணர்த்தும்.
உன் பெயர் உச்சரிக்கும்…
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்
என் மனம் உன் வசமே…
கண்ணில் என்றும் உன் சொப்பனமே…
விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக்கோலம் தான்
ஆலம் விழுதுகள் போலே
ஆடும் நினைவுகள் கோடி…
ஆடும் நினைவுகள் நாளும்
வாடும் உனதருள் தேடி
இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும்
எந்தன் உயிர் உன்னைச் சேரும்…

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

பெயர் உச்சரிக்கும் உள்ளம் தத்தளிக்கும். நீயில்லாது எது வேனிற்காலம்., என் மனம் உன் வசம். கண்ணில் உன் சொப்பனம். விழி காண்பது எல்லாமே உன் காட்சிதான். ஆலம் விழுதுகள் போல கோடி நினைவுகள். ஆடும் நினைவுகள் உனதருள் தேடி வாடும். இந்தப் பிறப்பு,எந்தப் பிறப்பு எதுவாக இருந்தாலும் எந்தன் உயிர் உன்னைச் சேரும்... என்று மீட்டருக்கு தகுந்தது போலவும் இதய லப்டப்புகளுக்கு ஏற்றது போலவும் வாலி வரிகளால் வாழ்ந்திருப்பார். வரிகளையே வாழச் செய்திருப்பார்.
 
ஆறுமாதக் குழந்தையை, இரண்டு கால்களுக்கும் நடுவே படுக்கவைத்துக்கொண்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பாட்டி, கால்களை, பாதங்களை, நகங்களை, முட்டியை, கன்னத்தை,கழுத்தை, முதுகை நீவிவிடுவதைப்பார்த்திருக்கிறோம்தானே! என் மகன் பிறந்த போதும், பிறகு மகள் பிறந்தபோதும், எனக்குப் பிடித்த பாடல்களைப் பாடிக்கொண்டே, குழந்தையை சிரிக்கவைத்துக்கொண்டே மசாஜ் செய்தபடி, குளிப்பாட்டிவிட்டிருக்கிறேன். அப்படியொரு இதம்தான், இந்தப் பாடலின் வழியே இளையராஜா நமக்குக் கொடுத்திருப்பார்.

சென்றது கண்ணுறக்கம்…
நெஞ்சில் நின்றது உன் மயக்கம்
இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
உன்னிடம் சொல்வதற்கு…
எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
பாதச் சுவடுகள் போகும்
பாதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற போதும்
கூட மறுப்பதோ நீயும்
உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு
நெஞ்சில் இடம் தர வேண்டும்…

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேரெது…
நீயெனை சேரும் நாளெது…ஓஹோ

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
இந்தப் பாடலின் படத்தைச் சொல்லிவிட்டேன். எழுதியவரையும் நடித்தவர்களையும் கூட சொல்லிவிட்டேன். இந்தப் பாடலை மூன்று பேர் பாடியிருக்கிறார்கள். எவருடைய குரல்கட்டுக்குள் சிக்காத, ஸ்வர்ணலதா ஒருமுறை இந்தப் பாடலைப் பாடியிருப்பார்.
இதேபாடலை, ஜீவன் சேர்த்து, உயிர் கொடுத்து, ஜேசுதாஸ் பாடியிருப்பார். இசை எனும் தேவகானத்தைக் கொடுத்தது மட்டுமில்லாமல், ஒரு தேவதூதனாக, தேவநாதனாகவே இளையராஜாவும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார். ஒரே கல்லில் மூணு மாங்காய் போல், ஒரே பாட்டு மூவரின் குரல் வழியே...!

இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் வாலியின் வரிகளுக்காக ஒருமுறை, ஸ்வர்ணலதாவின் வேதனைக் குரலுக்காக ஒருமுறை, ஜேசுதாஸின் காந்தக்குரலுக்காக ஒருமுறை என ஒவ்வொரு முறையும் மெய்ம்மறந்திருக்கிறேன். சிலிர்த்திருக்கிறேன். விகசித்திருக்கிறேன்.
இளையராஜாவின் குரலில் கேட்கும்போது மட்டும்... ‘புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனம்’ என்று புதிதாகப் பிறந்து, இருப்பதையெல்லாம் இறக்கச் செய்து, பிறகு மீண்டும் பிறந்து... என ஒரு பிறவிக்குள் ஓராயிரம் முறை செத்துப் பிறந்து, பிறந்துசெத்து, பிறந்து உலவிக்கொண்டிருப்பதாக உணருகிறேன்!
 
உங்களுக்கு எப்படியோ..? எனக்கு ரவா லாடு ரொம்பப்பிடிக்கும். குலோப்ஜாமூன் ரொம்பரொம்பப் பிடிக்கும். தேங்காய் பர்பி என்றாலே ‘ஷூகர் லெவலாவது மண்ணாவது... நமக்கு கடவுள் மாதிரி நம்ம மோகன் டாக்டரு இருக்காரு. பாத்துக்கலாம்... என்று டப்பாவை காலி செய்துவிடுவேன்! எனக்கு ஸ்வர்ணலதா, ஜேசுதாஸ், இளையராஜா என மூன்று பேர் பாடிய ‘ஊரெல்லாம் உன் பாட்டுதான்’ என்கிற பாட்டு, ரவா லாடு, குலோப்ஜாமூன், தேங்காய் பர்பி!
 
உங்களுக்கும் அப்படித்தானே..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow