ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு கவிதை… 26 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படும் "ரிதம்"!

இயக்குநர் வஸந்தின் ‘ரிதம்’ திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான நினைவுகள், அர்ஜூன் - மீனாவின் சிறப்பான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றும் வாழ்க்கையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கதையின் பின்னணி பற்றிய பதிவை விரிவாகப் பார்போம்.

Sep 17, 2026 - 21:00
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு கவிதை… 26 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படும் "ரிதம்"!
Rhythm Movie

கொஞ்சம் பேச்சு... கொஞ்சம் சினிமா! -வி.ராம்ஜி

மனதில் உருவான கருவை, கதையாக உருவாக்குவதும் அதை திரைக்கதையாக்கி சினிமா மொழியில் தருவதும் ஆகச்சிறந்த கலை. அதற்குள் கேரக்டரைஸேஷன், காட்சிகள் நறுக்கி ஒட்டுகிற விதம், காட்சிக்குத் தகுந்தது போல் நறுக்சுருக்கென வசனம், எல்லாவற்றுக்கும் மேலாக, படத்துக்குள் வைக்கிற பாடல்கள், அந்தப் பாடல்களுக்கு வைக்கிற ‘கட் ஷாட்டுகள்’ என தறி நெசவு போலத்தான் சினிமாவும்! நுணுக்கிநுணுக்கி சிற்பம் போல் செதுக்குகிற இயக்குநர்கள் பலர் உண்டு. அவர்களில் இயக்குநர் வஸந்த் தனித்துவமானவர்! அவரின் ஒவ்வொரு படமும் ஒரு இசைக்கோர்வையைப் போல் ‘ரிதம்’ வடிவில் இருக்கும். அவரின் ‘ரிதம்’ கூட இந்த வகைதான்! படம் வெளியாகி 26 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் ஆக்‌ஷன் அர்ஜூனின் மென்மையான நடிப்பும் அழகு மீனாவின் பொறுப்புமிக்க பாவனைகளும் ஏஆர் ரஹ்மானின் இசையும் ஜீவனாக, ஜீவனுக்குள் கலந்திருப்பதாகத்தான் உணருகிறேன்.

திருச்சி மாரீஸ் ராக் தியேட்டரில் முதல்நாளின் இரவுக்காட்சி. மழையில் லேசாக நனைந்ததைக் கடந்தும் ஏஸியின் சில்லிப்பைத் தாண்டியும் கூடுதல் குளிர்ச்சியைக் கண்ணுக்குக் கடத்திய இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்றே நினைவில் இல்லை. ஆனால் படம் மட்டும் அப்படியே நினைவு லாக்கருக்குள்..!

தொந்நூறுகளில் எழுத்தாளர் பாலகுமாரன் சாருடன் உதவியாளனாகப் பணியாற்றும் போதிருந்தே வஸந்த் சாரைத் தெரியும் எனக்கு. கிடைக்கும் நேரத்தில் எல்லாம், அவருடைய குருநாதர் கே.பாலசந்தர் குறித்து கேட்டுக்கேட்டு தெரிந்துகொள்வேன். ‘கேளடி கண்மணிக்கு எஸ்பிபியை ஹீரோவாக்கியது, ‘ஆசை’யில் அஜித் நடிக்கும்போது உணர்ந்தது, ‘அப்பு’வில் வேறொரு பிரசாந்தை வெளிக்கொண்டு வந்தது நிறையவே கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘ரிதம்’ படமும் அப்படித்தான்!
பத்திரிகையுலக ஜாம்பவான் என்றும் சிறந்த எழுத்தாளர் என்றும் பல எழுத்தாளர்களை உருவாக்கியவர் என்றும் ‘சாவி’யை இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

அவருடைய குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு விஷயத்தில் இருந்து ‘ரிதம்’ கதையை ‘நூல்’ பிடித்ததாக வஸந்த் சார் சொல்லியிருக்கிறார். பிரமிட் பிலிம்ஸ் வி.நடராஜன் தயாரித்தார். அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் முதலானோர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் வஸந்தின் இயக்கத்தில் வெளியானது ‘ரிதம்’. அழகிய ஸ்ருதியுடனும் லயத்துடனும் அமைத்திருந்தார். அல்லது அப்படி அமைத்த இந்தப் படத்துக்கு இப்படியொரு பெயரைச் சூட்டியிருந்தார்.

ஜோதிகாவை திருமணம் செய்துகொண்ட அர்ஜூன். ரமேஷ் அரவிந்தை கல்யாணம் பண்ணிக்கொண்ட மீனா. அர்ஜூன் ஜோதிகாவை இழக்கிறார். ரமேஷ் அரவிந்தை மீனா இழக்கிறார். இந்த இழப்புக்கு ஒரே காரணம்.. அந்த ரயில் விபத்து. இப்போது மகனுடன் வாழ்ந்து வரும் மீனா, அர்ஜூனை சந்திக்கிறார். அடுத்து என்ன என்பதுதான் ‘ரிதம்’ படத்தின் கவிதைக்கல்வெட்டு!

‘’அந்தக் கேரக்டருக்கு மீனாதான்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். என்னுடைய ‘நீ பாதி நான் பாதி’ படத்திலேயே மீனா நடிக்க வேண்டியது. ஹீரா ரோல்ல  அவங்கதான் நடிச்சிருக்கணும். அப்போ அவங்க கால்ஷீட் கிடைக்கல. எப்படி யாரை யூஸ் பண்றோமோ அவங்க, அப்படிஅப்படி பண்ணப் போறாங்க.  கடற்கரைக்குப் போய், ஒரு லாரி எடுத்துட்டுப் போனீங்கன்னா, ஒரு லாரில தண்ணீர் எடுத்துட்டு வருவீங்க. ஒரு ஸ்பூன் எடுத்துட்டுப் போனீங்கன்னா, அவ்வளவுதான் தண்ணீர் எடுத்துட்டு வருவீங்க. அவங்ககிட்டலாம் நடிப்பு இருக்கு. நாமதான் கேட்டு வாங்கணும். நாமளும் நம்மகிட்ட இருக்கிற கதைக்கு, கதாபாத்திரம் அமைச்சு, அவங்களை நடிக்க வைக்கணும். அதுதான் முக்கியக் காரணம்.

தவிர, எனக்கும் மீனாவுக்கும் மிகச்சிறந்த புரிதல் இருந்தது. என் படத்தில் நடித்த நடிகைகள் எல்லோருமே பிரமாதமா நடிச்சுக் கொடுத்தாங்க. ராதிகாலாம் ஒண்ணுமே சொல்லவேணாம். நினைச்சதை விட பல மடங்கு நடிப்பைக் கொடுத்தாங்க. ’கேளடி கண்மணி’ அப்படி பிரமாதமா பண்ணிருப்பாங்க ராதிகா. ’நீ பாதி நான் பாதி’ படத்துல, கவுதமி பிரமாதமா பண்ணிருப்பாங்க.

மத்தபடி நான் புதுமுகங்களை வைச்சுத்தான் படங்கள் பண்ணினேன். சுவலட்சுமியா இருக்கட்டும்... ‘நேருக்கு நேர்’ல சிம்ரனா இருக்கட்டும்... ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ல ஜோதிகாவா இருக்கட்டும். அவங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கிற பொஸிஷன்ல இருந்தேன். ஏன்னா... அவங்களாம் புதுமுகங்கள். மீனாகிட்ட ஒரு புரிதல் இருந்தது. நான் என்ன சொன்னாலும் மீனாகிட்ட, அவங்க முகத்துல அப்படியொரு எக்ஸ்பிரஷன் வந்துரும். ஆக்‌ஷனா வரும். அப்படியொரு மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தாங்க மீனா’’ என இயக்குநர் வஸந்த் ‘ரிதம்’ நினைவுகளில் மூழ்கினார்.

அர்ஜூன் அடிதடியில் வெளுத்தெடுப்பவர். ஜெண்டில்மேன், முதல்வன், வானவில் என அட்டகாசமான நடிப்பை, மிதமாக வெளிப்படுத்துவதிலும் வல்லவர். ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் ஆக்டிங்கிலும் கிங் என ‘ரிதம்’ படத்திலும் நிரூபித்தார்.

‘’அர்ஜூன் எனக்கு ரொம்பப் பிடித்த நடிகர். அவர் ‘ஆக்‌ஷன் கிங்’ மட்டுமெல்லாம் இல்லை. அவர் ஆக்‌ஷன் படங்களில் நடித்ததால், அவரை ஆக்‌ஷன் கிங் என்று சொல்லுகிறோம். உண்மையிலேயே அவர் ’ஆக்டிங் கிங்’ அப்படீங்கறது, என் மனசுல இருந்துக்கிட்டே இருக்கும். அவரோட எல்லாப் படங்கள்லயுமே, சிறப்பான நடிப்பைக் கொடுத்திருப்பார் அர்ஜூன்.

’’இவ்ளோ படங்கள்ல நடிச்சு, நமக்கெல்லாம் ஆக்‌ஷன் கிங்னு தோணின அர்ஜுனை, முழுக்க முழுக்க, இயல்பான, அடுத்த வீட்டுப் பையன் போல, ஒரு நார்மலான மனுஷனா, பெரிய ஹீரோயிஸம்லாம் எதுவும் இல்லாம, சாஃப்ட்டா, ரொம்ப நல்லவரா, அப்பா அம்மாவை பாத்துக்கறவரா... என் கதைல இருக்கிற ‘கார்த்திக் சார்’ங்கற ஒரு கதாபாத்திரமா அவரைப் பாத்தேன். யோசிச்சேன். அப்ரோச் பண்ணினேன். இதுல ரொம்ப நல்ல விஷயம் என்னன்னா... இதையெல்லாம் ஒரு டைரக்டரா நான் நினைச்சிடலாம். ஆனா, அதுவரைக்கும் தன் இமேஜ் இருக்கிற படங்கள்ல நடிச்சவர். அஞ்சு ஃபைட், நாலு ஃபைட் இருக்கிற படங்கள்ல நடிச்சவர். வில்லன்களை அடிச்சு, உதைச்சு, துவைக்கிற பெரிய ஹீரோயிஸ கேரக்டர்ல நடிக்கிற அவர், இப்படியொரு வித்தியாசமான கதைல, கேரக்டர்ல நடிக்கலாம்னு அவருக்கும் தோணுச்சு. அவர் ஒத்துக்கிட்டார். அதனாலதான், இன்னிக்கி வரைக்கும் ‘ரிதம்’ முக்கியமான படமா, முக்கியமான விஷயமா இருக்கு’’ என்கிறார் டைரக்டர் வஸந்த்.

’’எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அது 98வது வருஷம்... அர்ஜுன் சாரைப் பார்த்து கதை சொன்னேன். அவரோட கால்ஷூட்டுக்காக வெயிட் பண்ணி இந்தப் படம் பண்ணினோம். ரொம்ப திருப்தியா நடிச்சுக் கொடுத்தார். ’என் படங்களிலேயே ‘ரிதம்’ ரொம்ப முக்கியமான படம்’னு அர்ஜுன் சாரே சொன்னாரு. எனக்குமே ‘கார்த்திக் சார்’ங்கற கேரக்டர்ல அர்ஜூன் சார் பண்ணினது ரொம்பவே சந்தோஷம்; மனநிறைவு!’’என்றார் வஸந்த் சார்.

படத்தின் தலைப்பு அழகு. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம். இந்த வார்த்தை சாதாரணமானது அல்ல. காரணம்... பஞ்சபூதங்களையும் ஒவ்வொரு பூதங்களாக வைத்து பாடல்களாக கட்டமைத்திருப்பார். பாடல்களில் நறுவிசு காட்டுவதும் நகாசு பண்ணுவதும் வஸந்த் ஸ்பெஷல். ‘ரிதம்’ படத்திலும் இப்படித்தான்! ‘ஏஆர். ரஹ்மான் என்னத்தை மியூஸிக் போடுறாரு. ஒரே இரைச்சலா இருக்கு’ என்று வீண் விதண்டாவாத தர்க்கங்களையெல்லாம் செய்தவர்கள் கூட, ரஹ்மானைக் கொண்டாடினார்கள், இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு..!

’’கதை முடிவானதுமே நான் வைத்த தலைப்பு ‘ரிதம்’தான். வாழ்க்கையின் ‘ரிதம்’ என்றுதான் படத்தின் கதையையும் தலைப்பையும் ‘ரிதம்’ எனும் விஷயத்தையும் சேர்த்துப் பார்த்தேன். பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனக் கொண்டதுதானே வாழ்க்கை. ‘வாழ்க்கை சந்தோஷமா இருக்கா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்றுதான் சொல்லுவோம். ’சரி... தினமும் வருத்தமாத்தான் இருக்கா?’ என்று கேட்டால், உண்மையாக பதில் சொல்வதாக இருந்தால், அதற்கும் ‘இல்லை’ என்றுதான் பதில் வரும். அப்படின்னா, வாழ்க்கை எப்படி இருக்கு? ஒருநாள் வருத்தமா இருக்கு, ஒருநாள் சந்தோஷமா இருக்கு.

வாழ்க்கையை நான் எப்படிப் பாக்கிறேன்னா... தினமும் நைட் மட்டுமா இருக்கு? பகலும்தானே இருக்கு. அதேபோல விடியாத இரவென்று ஒன்று கிடையவே கிடையாது. முடியாத துன்பம்னு ஒண்ணு கிடையவே கிடையாது. எனக்கு இது ரொம்பப் பிடிக்கும். பின்னாடி படம் பண்ணும்போது, ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ பாட்டுல, நா.முத்துக்குமார்கிட்ட சொன்னேன். அவர் எழுதிக்கொடுத்தார்... ’வளைவில்லாமல் மலை கிடையாது, வலியில்லாமல் மனம் கிடையாது, வருந்தாதே வா’ன்னு அற்புதமான வரிகளை எழுதியிருந்தார். எங்கேயாவது, மலைல ஏறணும்னா... வளைஞ்சு வளைஞ்சுதான் போகணும்.

வாழ்க்கையோட உயரத்துக்குப் போகணும்னா, நாம வளைஞ்சு வளைஞ்சுதான் போயாகணும். வளையறதெல்லாம் வலின்னு நினைச்சா, வலியில்லாம மனம் கிடையாது. வருந்திக்கிட்டே இருக்கக்கூடாது. அந்த வருத்தங்களையெல்லாம் விட்டுட்டு மேலே போகணும். இதுதான் ‘ரிதம்’ படத்தோட தீம். அதாவது, வாழ்க்கைங்கறது தினமும் சந்தோஷமாவும் இருக்கறதில்ல; வருத்தமாவும் இருக்கறதில்ல.

அது, சந்தோஷத்திலேருந்து வருத்தத்திற்கும் வருத்தத்திலேருந்து சந்தோஷத்திற்குமான ஒரு வட்டச்சுழல். ஒரு சக்கரம் மாதிரி போயிக்கிட்டே இருக்கு. ஆக, அதுல நாமளும் போயிகிட்டே இருக்கணும். பயணம் பண்ணிக்கிட்டே இருக்கணும்’’ என்று வஸந்த் சொல்ல, ஜாம்பவான் சாவி அவர்கள் தொடங்கிய ‘திசைகள்’ புத்தகங்களும் அந்தக் கூட்டத்தில் வஸந்த் சாரும் இருந்ததும் நினைவுக்கு வந்தன! .

வாழ்க்கைங்கறதே ரொம்ப அபூர்வமான விஷயம். அவ்வையார் சொன்னது மாதிரி ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’. நாம ஒரு கொசுவாப் பிறந்திருந்தோம்னா, ஒருநிமிஷம் ‘பேட்’ல அடிச்சுப் போட்டுருப்பாங்க. நாம எவ்வளவோ ஜென்மங்கள்ல, எவ்வளவோ புண்ணியங்கள் பண்ணி மனுஷனாப் பொறந்திருக்கோம். அதனால, மனுஷனாப் பொறந்த முக்கியத்துவத்தை உணரணும்.

ரொம்ப ஈஸியா, எல்லா விஷயத்துக்காகவும் இப்போ தற்கொலை பண்ணிக்கறதைப் பாக்கும்போது மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. பரிட்சைக்காக தற்கொலை பண்ணிக்கறது, காதலுக்காக தற்கொலை பண்ணிக்கறதுன்னு எதுக்காகவுமே தற்கொலை பண்ணிக்கறது தப்புன்னு நினைக்கிறேன். இதை வேற விதமா ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்துல கூட சொல்லிருப்பேன்.

‘நதியே நதியே காதல் நதியே’. ‘காற்றே என் வாசல் வந்தாய்’, ‘பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெருப்பு’, ‘தனியே தன்னந்தனியே’ என்று பாடல்களில் வைரமுத்துவும் ரஹ்மானும் அமர்க்களம் செய்திருப்பார்கள். வைரமுத்துவின் வரிகள் ஜில்லிடவைக்கும்; ரஹ்மானின் இசை சிலிர்க்கவைக்கும்!

’’இதெல்லாம் சேர்ந்ததுதான் ‘ரிதம்’ படத்தோட தீம். ஆகவே, வாழ்க்கைங்கறது வாழ்றதுக்கு. எது நடந்தாலும் வாழணும். ரொம்பப் பிடிச்சவங்க இறந்து போயிட்டாங்கன்னா, அதுக்காக நாமளும் இறந்துபோயிடமுடியாது. நாம வாழணும். அட்லீஸ்ட்... நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க, எதுக்காகலாம் வாழ்ந்தாங்களோ, அதுக்காகவாவது வாழணும். அதுதான் வாழ்க்கைன்னு நான் நினைக்கிறேன்.

அதுதான் ’ரிதம்’ படத்தோட ஜீவன். மனைவியை இழந்த கணவன், கணவனை இழந்த மனைவி. அவர்கள் இணைவதால் உண்டாகும் வாழ்க்கை. இதுதான் நிஜம்; யதார்த்தம்! அதுக்காகத்தான் ‘ரிதம்’னு டைட்டில் வைச்சேன். அதையும் தவிர, ரஹ்மானோட இசை. முதன்முதல்ல ரஹ்மானோட சேர்ந்து பண்றேன். இசை சம்பந்தமா ஒரு டைட்டில் இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன். அதையும் தாண்டி... ‘இசைபட வாழ்தல்’னுதானே சொல்றோம்’’ என்றார் சிரித்துக் கொண்டே!

’காற்றே என் வாசல் வந்தாய் - மெதுவாக
கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக்கேட்டேன்
காதல் என்றாய்!’ என்ற வரிகளுக்குள்ளேயும் வாழ்க்கைக்குள்ளேயும் ஒரு ‘ரிதம்’ இருக்கிறது; இருக்கும்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow