தவெக அமைச்சரவையில் பா.ம.க.? 2031-ஐ குறிவைக்கும் அன்புமணியின் அதிரடி அரசியல் கணக்கு!
பா.ம.க. வரும் தேர்தல்களில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில் தவெக உள்ளிட்ட கட்சிகளுடன் அரசியல் கணக்குகளை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தவெக அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறும் என்ற தகவலை அக்கட்சி வதந்தி என மறுத்துள்ளது.
இடைத்தேர்தலுக்குப் பிறகு த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற போவதாகவும், சௌமியா அன்புமணி அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாகவும் அரசியல் களம் பரபரக்கிறது. இதனால், வி.சி.க. பொங்கியெழ, பா.ம.க. பாலிஸாக 'வதந்தி' என நழுவியிருக்கிறது.
ஆனால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தராமல் ஒதுங்கியது, த.வெ.க.வை மென்மையான போக்கிலேயே அணுகுவது போன்ற செயல்பாடுகளின் பின்னணியில் அன்புமணியின் அரசியல் கணக்கு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதுகுறித்து பா.ம.க. சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். 2004-2011 காலகட்டத்தில் பட்டியல் மற்றும் வன்னியர் சமூக மக்களை ஒருங்கிணைக்க திருமாவளவனோடு கைகோத்து, 'தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்று செயல்பட்ட ராமதாஸ் கூட்டணியில் முரண்பட்டதோடு, சாதிய மோதல்கள் ஏற்பட்ட சமயத்தில் தலித் அல்லாத 'அனைத்து சமுதாயப் பேரியக்கம்' எனும் பெயரில் அமைப்பைத் தொடங்கி வரலாற்றுப் பிழையை செய்தார்.
அதனால், அவரது மைய நீரோட்ட அரசியல் 2012ல் முடிந்தே போனது. அதன்பின், விசிக பாமக எதிரெதிர் துருவங்களாகின. ஒரு காலத்தில் மத்திய அமைச்சர் பதவி, தமிழக அரியணையை முடிவு செய்யும் சக்தி என்றளவுக்கு. எம்.பி. எம்.எல்.ஏக்களை வைத்திருந்த பாமக. இந்த பிரிவுக்குப் பிறகு சொற்ப இடங்களுக்குள் சுருங்கி, கட்சிக்கான அங்கீகாரத்தையும் இழந்தது. ஆனால், வி.சி.க வளர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்துவிட்டது.
இதனால், தன் சமூக ஆதரவு மட்டுமே கட்சி வளர்ச்சிக்கு போதாது. மாற்று சமூக மக்களின் ஆதரவும் தேவை என்பதை அன்புமணி உணர்ந்தார். இதற்கிடையே 2026 தேர்தலுக்குப் பிறகு வி.சி.க சற்று தடுமாற அதன் அதிருப்தியாளர்களிடமும், பட்டியலின மக்களிடமும் பாமகவை பொதுவான கட்சியாக முன்னிறுத்தி அதன்மூலம் 2029 மற்றும் 2031 தேர்தல்களில் மகத்தான வெற்றிபெற பெரிய திட்டமொன்றையும் வகுத்து காய்களை நகர்த்திவருகிறார்.
அதாவது, 'தவெக வருகையால் தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான் என்ற நிலை உருவாகிவிட்டது வரும் காலங்களில் இன்னும் சில நடிகர்களும் கட்சி தொடங்கவுள்ளனர். அப்படியானால் 2031 சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு கிடைத்த அளவுக்கு கூட யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. பா.ம.க. அந்த தேர்தலில் குறைந்தது 15 இடங்களையாவது பிடித்துவிட்டால், தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிடும். தமிழ்நாட்டை ஆளவும் வாய்ப்பிருக்கிறது என்பதுதான் அன்புமணியின் எண்ணம். அதற்கு பா.ம.க, வன்னியர் கட்சி என்ற அடையாளத்தை அழிந்து, தமிழ்ச் சமூக மக்களுக்கான கட்சியாக பிரதிபலிக்கவைக்க வேண்டும்.
அதற்காக வன்னியர், தலித் ஒற்றுமை உள்ளிட்ட பல யுக்திகளை கையாளத் தொடங்கியிருக்கிறார். அதிலொன்றுதான் 'இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை' என அறிவித்தது. அதாவது, 2026 தேர்தல் முடிவுக்குப் பிறகு நிர்வாகிகளிடம் பேசிய சௌமியா மற்றும் அன்புமணி ஆகியோர், 'பாமக போட்டியிட்ட பல தொகுதிகளில் அதிமுகளின் ஓட்டு 3000 என்ற எண்ணிக்கையில் கூட நமக்கு டிரான்ஸ்ஃபர் ஆகவில்லை.
அது நடந்திருந்தால் நாம் 10 சீட் ஜெயித்திருப்போம். ஆட்சியை தீர்மானித்திருப்போம். அதேபோல், 2024 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கனத்திலிருந்து அதிமுக ஒதுங்க நின்றபோதும், மறைமுகமாகக்கூட நமக்கு ஆதரவளிக்கவில்லை. நாமும் அவர்களுக்கு இம்முறை ஆதரவளிக்க போவதில்லை' எனக் கூறிவிட்டார்கள்.
இதற்கிடையே தவெகவும் திமுகவும் பா.ம.கவின் ஆதரவை கேட்டன. ஆனால், தவெக வேட்பாளர்களான மரகதமும், சத்யபாமாவும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தபோதே இருவரையும் காட்டமாக விமர்சித்திருந்தார் அன்புமணி எனவே மொத்தமாக களத்திலிருந்து ஒதுங்கிவிட்டது. பாமக இதற்கிடையே தவெக ஆலோசகர் ஒருவர், சௌமியா செயல்பாடுகள்மீது முதல்வர் மதிப்பு வைத்திருக்கிறார். அவரை அமைச்சராக்க நினைக்கிறார். இடதுசாரிகள் இருந்தாலும். வெளியேறினாலும் நீங்கள் உள்ளே வாருங்கள் என பேசியிருக்கிறார்.
ஆனால், முதல்வர் பதவியை எதிர்பார்த்து அமைச்சர் ஆஃபரை ஹோல்ட் செய்திருக்கிறது பாமக தலைமை மேலும் வன்னியர் மக்களை தாண்டி பட்டியல் மற்றும் இதர தமிழ்ச் சமூக மக்களின் ஆதரவை பாமக எளிதாக பெறவேண்டும் என்றால், தவெகவை சீண்டக் கூடாது என்றும் கட்சியினரிடம் சொல்லியிருக்கிறார் அன்புமணி காரணம் சமூகநீதி கணக்கெடுப்பு. அதாவது வன்னியர்களுக்கு 10.5% உள் இடதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம். சரியான புள்ளிவிவரம், தரவுகள் இல்லை என்பதுதான். அந்த தரவுகள் இருந்தால் மாநில அரசே உள் இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கிவிட முடியும்.
எனவே, மத்திய, மாநில அரசுகளை அந்த கணக்கெடுப்பை நடத்த வைத்துவிட்டால் நீதிமன்றம் சென்றுகூட இடஒதுக்கீட்டை பெற்றுவிடலாம் அது நடந்தால் வன்னியர் மட்டுமின்றி பட்டியல் மற்றும் இதர நலிவடைந்த சமூக மக்களுக்கும் விகிதாச்சாரம் அதிகரிக்கும் இதைச் சொல்லியே பா.ம.க.வை அனைவருக்குமான கட்சியாக முன்னிறுத்த முடியும் பலவீனமாக இருக்கும்போதே துடிக்கிறார் அன்புமணி.
அதேபோல, பா.ம.க.வை சாதியை மீறிய கட்சியாக அடையாளப்படுத்த சௌமியாவை பொதுத்தலைவராக அடையாளப்படுத்த தொடங்கிவிட்டார். 'மது இல்லா தமிழகம் சௌமியாவை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யவைத்து பா.ம.கவை வலுப்படுத்த காய்நகர்த்த தொடங்கிவிட்டார். அதேநேரம், வன்னிய மக்களின் ஆதரவையும் தக்கவைத்துக்கொள்ள குறியாக இருக்கிறார்.
குறிப்பாக, வன்னியர் சமூக இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் தினத்தன்று (செப்டம்பர் 17), 25 தியாகிகள் குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுமனை பட்டா கொடுத்து தன் சமூக மக்களிடையே பா.ம.க. மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கிறார். பட்டியலின மக்களோடு உரசல் வேண்டாம் வழக்கு வாங்காமல், டி.கிரி வாங்குங்கள்' என இளம் பாமகவினரை அறிவுறுத்தி வருகிறார் அன்புமணி. தவிர, ஒன்றியம் வாரியாக நேரடியாக செல்வதுடன், கிளை அளவிலான பொறுப்பாளர்கள் யார். அவர்களது செயல்பாடுகள் எப்படி என அவர் ஆராயவிருக்கிறார்" என்று சொல்லி முடித்தார்.
இதுகுறித்து பா.ம.க பொருளாளர் திலக பாமாவிடம் கேட்டோம் 'தவெக அமைச்சரவையில் பாமக என்பது வதந்தி. இப்போதைய சூழலில் பாமகவை ஸ்திரப்படுத்துக்கொள்ள மக்களை நோக்கிச் செல்கிறோம். இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது என்பதால், எங்களுக்கு உடன்பாடில்லை என்றார்.
ஆக மீண்டும் மாற்றம். முன்னேற்றம்!
(அ.கண்ணதாசன்)
What's Your Reaction?

