காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமா திமுக?.. பிரதமர் விட்ட சவால்.. தைரியம் இருக்கா என்கிறார் குஷ்பு

காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக முறித்துக்கொள்ளுமா? என்று பிரதமர் மோடி விட்ட சவாலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இருக்கிறதா என்று நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

May 9, 2024 - 14:51
காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமா திமுக?.. பிரதமர் விட்ட சவால்.. தைரியம் இருக்கா என்கிறார் குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவின் ‘தோல் நிறம்’ குறித்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கியுள்ள பிரதமர் மோடி, ‘நிற வெறி குறித்த அவமானத்தை நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சாம் பிட்ரோடா அளித்த பேட்டி ஒன்றில், “அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சண்டைகளைத் தவிர்த்து நாங்கள் அனைவரும் 75 ஆண்டு காலம் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்ந்திருக்கிறோம். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை எங்களால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும்.

கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போல தோற்றமளிக்கலாம், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடகில் உள்ள மக்கள் ஒருவேளை வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கலாம். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. 

நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். வெவ்வேறு மொழிகள், மதங்கள், உடைகள், வெவ்வேறு உணவு பழக்கவழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். பிட்ரோடாவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலங்கானா மாநிலம் வாரங்கலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "எனது நாட்டில் தோலின் நிறத்தினை வைத்து மக்களின் திறமையினை தீர்மானிக்க முடியுமா? தோலின் நிறத்தினை வைத்து விளையாட இளவரசருக்கு யார் அனுமதி கொடுத்தது என்று கேள்வி எழுப்பினார்.

இளவரசரின் மாமா அமெரிக்காவில் வசிக்கிறார் என்று இன்றுதான் நான் அறிந்து கொண்டேன். அந்த மாமா அவரின் தத்துவ ஆலோசகர் மற்றும் வழிகாட்டியுமாவார். இளவரசரின் அந்த வழிகாட்டி இன்று மிகப் பெரிய ரகசியத்தை இன்று உடைத்துள்ளார். கருமையான நிறம் கொண்டவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

சாம் பிட்ரோடா நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களை தோலின் நிறத்தினை வைத்து அவமதித்துள்ளார். தோலின் நிறம் என்னாவாக இருந்தால் என்ன? நம்மைப் போல தோல் நிறம் கொண்ட கடவுள் கிருஷ்ணரை நாட்டு மக்கள் வணங்குகின்றனர்" என்று பிரதமர் மோடி பேசினார். இதனையடுத்து சாம் பிட்ரோடா சர்ச்சை பேச்சு குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விட்டார் மோடி. 

தமிழக கலாச்சாரம் குறித்து பேசும் ஸ்டாலினிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். தமிழனின் சுயமரியாதைக்காக காங்கிரஸ் கூட்டணியை திமுக முறித்துக்கொள்ளுமா? என்று மோடி கேட்டார். காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? சாம் பிட்ரோடாவின் கருத்துக்களை தெலங்கானா, கர்நாடகா முதல்வர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி. 

இதனிடையே சென்னை  விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வர இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் கொண்டாட ஒன்றுமே இல்லை. தனக்கு தானே கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். 

காங்கிரஸ் கட்சி பிரமுகர் சொன்ன நிற வெறி கருத்துக்கு பதில் சொல்ல கூடிய தைரியம் இருக்கா என்று பார்ப்போம். பிரதமர்  விட்ட சவாலுக்கு முதலமைச்சருக்கு தைரியம் இருக்கா. காங்கிரசை விட்டு தனியாக நிற்க முடியும் என்று திமுக சொல்ல தைரியம் இருக்கா? ராகுல்காந்தி பிரதமராக வர முடியும் என்று கூறுபவர்கள் ஏன் தனியாக நிற்க முடியவில்லை என்று கேட்ட குஷ்பு, ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் தெரிந்து விடும் என்றார். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கையுடன் கூறினார் குஷ்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow