தவெக ஆட்சியில் ஊழலா? வைகைச்செல்வன் கொடுத்த விளக்கம்!
தவெக ஆட்சியைச் சுற்றியுள்ள சர்ச்சைகள், இடைத்தேர்தல் வெற்றி, மின் கொள்முதல் விவகாரம், போதைப்பொருள் குற்றச்சாட்டு, அதிமுகவின் எதிர்காலம் உள்ளிட்ட கேள்விகளுக்கு அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வைகைச்செல்வன் பதிலளித்துள்ளார்.
விலைவாசி உயர்வு, மின் கொள்முதல் சர்ச்சை, மெத் கடத்திய கட்சி நிர்வாகி என ஆளும் த.வெ.க. அரசைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள். இந்த சூழலில், த.வெ.க. துணைப்பொதுச்செயலாளரும், முதன்மைச் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வனை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
மதுராந்தகம். தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள், போட்டி மிகவும் கடினமாக இருந்ததா?
"தவெக மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கை சிறிதளவும் குறையவில்லை. மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் தி.மு.கவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே இரண்டாமிடம் மூன்றாமிடம் யாருக்கு என்ற போட்டிதான் இருந்தது தவிர, முதல் இடத்திற்கு அல்ல. எங்கள் வெற்றி ஏற்கெனவே உறுதியாகி விட்டிருந்தது. ஏனெனில் மக்கள் எங்கள்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள். இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு மக்கள் கொத்துபரோட்டா போட்டுவிட்டதாக ஸ்டாலின் பதிவு செய்திருந்தார். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மக்களோடு மக்களாக இருந்து அறிஞர் அண்ணாவின் அறைகூவலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஜோசப் விஜய் இது மகத்தான வெற்றி"
வாக்கிற்கு பணம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தனவே... உங்களை ஆதரிக்கும் இடதுசாரிகளுமே இதை கூறினார்களே?
எதிர்க்கட்சிகள் சொல்கிற அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு. ஏதாவது குறை சொல்ல முடியுமா என எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அ.தி.மு.க.விலிருந்து ராஜினாமா செய்துவிட்டு தவெக வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை தராதீர்கள்' என இடதுசாரிகள் பிரசாரம் செய்தார்கள். ஆனால், வாக்காளர்கள் மறுத்துவிட்டனர். ஈரோடு இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜி தலைமையில் கொலுசுகள் கொடுக்கப்பட்டன. ஒரு தொகுதிக்கு 140 கோடி முதல் 150 கோடி செலவு செய்தார்கள். இதை அப்போது கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வி கேட்டதுண்டா?"
அதி.மு.க.வின் அடுத்தகட்ட நிலை என்னவாக இருக்கும்?
அதிமுக மூன்றாவது இடத்திற்கு பரிதாபமாக தள்ளப்பட்டுவிட்டது. எடப்பாடியை ஜனநாயகம், குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டது. எடப்பாடியால் அ.தி.மு.க. சின்னாபின்னமாகிவிட்டது. 55வது ஆண்டு விழாவை அ.தி.மு.க. கொண்டாடும் நிலையில், அக்கட்சி பாலைவனத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது."
'தூய ஆட்சி என்கிறீர்கள். ஆனால், போதைக் கடத்தல் உள்ளிட்ட பெரும் குற்றம்புரிகிறவர்கள் பலர் உங்கள் கட்சியில் இருக்கிறார்களே?
ஆன்லைன் மூலம் த.வெ.க.வில் உறுப்பினர்களாக ஆகிவிடுகிறார்கள். கட்சி அவர்களை பாதுகாக்கிறதா என்ன? இல்லையே! மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் தண்டனைக்குரியவர்கள் இல்லையே. மெத்தபெட்டமைன் குற்றச்சாட்டு வந்தவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறோம். குற்றம் உறுதியானால் சிறைக்கு செல்லட்டும். ஆனால் தி.மு.க.வில் அன்பில் மகேஷ் ஊழல் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோதே சிறை தண்டனை அனுபவித்தவர் உச்ச நீதிமன்றம் கண்டித்ததற்குப் பிறகே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்:
தி.மு.க. ஆட்சியில், ஒரு யூனிட் மின்சாரத்தை 21 ரூபாய்க்கு வாங்கியபோது, தி.மு.க. ஊழல் செய்கிறதா?' என பலரும் கேட்டனர். ஆனால், அதைவிட அதிக விலையில், த.வெ.க அரசு மின்சார கொள்முதல் செய்கிறதே. த.வெ.க.விலும் ஊழல் நடக்கிறதா?
"முறையாக டெண்டர் விடப்பட்டு அரசு இதை செய்கிறது. தற்போது பருவகாலமும் மாறுபடுகிறது. வரவேண்டிய நேரத்தில் மழை வரவில்லை. கோடை கால வெப்பம் அக்டோபர் வரை நீடித்தது. இந்த சூழலால் தான் இதுபோன்ற நிலை. இதில் எந்த ஊழலும் இல்லை"
எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சரி என்கிறீர்களா?
"இரட்டை வாக்கு, இறந்தவர்கள் வாக்கு என சில குளறுபடிகளால் தான் கடந்த முறை தி.மு.க. வென்றது. ஒரு தொகுதிக்கு இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் நபர்கள் வரை நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறாக நீக்கப்பட்டவர்கள் இறந்துபோனவர்களாகவோ அல்லது வேறு இடத்திற்கு சென்றவர்களாகவோ இருக்கலாம். என்னுடைய அருப்புக்கோட்டை தொகுதியில்கூட 32 ஆயிரம் பேர் நீக்கப்பட்டார்கள். எஸ்.ஐ.ஆர். நடைமுறையில், தவறு இருப்பின் அதை எதிர்ப்போம். அதுகுறித்து விரிவான அறிக்கை தவெக வெளியிடும்"
முதல்வர் விஜய் சமீபத்தில் மோடி, ராகுல் இருவரையுமே சந்தித்தார். ஆனால் ராகுலுக்கு உரிய வரவேற்பு இல்லை என்கிறார்களே?
"அப்படியெல்லாம் இல்லை. இருவருக்குமே நாங்கள் உரிய மரியாதையை கொடுத்தோம். முதல்வர் விஜய், முதல் நாள் ராகுலை காபி ஷாப்பில் சந்தித்தார். மறுநாள் பாரத பிரதமரை சந்தித்தார். பிரதமருக்கு என்ன புரோட்டாகால் இருக்கிறதோ அதைத்தான் செய்தோம். மத்திய அரசுடன் எங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை பிரதமர் மேடையில் இருக்கும்போதே முதல்வர் மிகத் தெளிவாக சொல்லிவிட்டார். அப்படியானால், கொள்கையோடு துணை நிற்பதல்ல. நிதியைப் பெற துணை நிற்போம். இது சிறுபான்மையினருக்கான ஆட்சி. மத்திய அரசோடு இணக்கமாக இருந்து அதை நிலைநாட்டுவோம்."
இது சிறுபான்மையினருக்கான ஆட்சி என்றால் மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்ற உத்தரவு வந்திருக்கிறது. இதில் த.வெ.க. நிலைப்பாடு என்ன?
"நிச்சயமாக இதுகுறித்து பரிசீலனை செய்வோம். அடுத்து சீராய்வு மனு போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது."
த.வெ.க. அரசின் அறிவிப்புகள் பெரும்பாலும் 'யூடர்ன்' ஆகி பின்வாங்கப்படுகிறதே ஏன்?
"ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்துகிறோம். அது மக்களுக்கு உகந்ததாக இல்லை என்று தெரிந்தால் முரண்டுபிடிக்காமல், முன் வைத்த காலை பின்வைப்பதா என தயங்காமல் உடனே பின்வாங்குகிறோம். ஆக, மக்கள் நலனே முக்கியம். இது மக்களுக்கான ஆட்சி"
What's Your Reaction?



