கடந்த தேர்தல் கொடுத்த 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் : முதல்வர் ஸ்டாலின் சொன்ன அப்டேட்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இந்த சாதனையை செய்தது திராவிட மாடல் என்று ‘உங்க கனவ சொல்லுங்க..’ திட்டத்தை இன்று திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற புதிய திட்டம் தொடக்க விழா இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பட்டியலின மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்பு நிலை மக்கள் என, எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எதிராக மட்டுமே செயல்படும் பாஜக தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. தமிழகத்துக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், மக்களின் எண்ணங்களை பிரதிபலித்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதே தன் முதல் வேலையாக வைத்துள்ளார்.
இத்தனையையும் மீறி, மக்கள் எங்கள் கூடவே இருப்பதால்தான் 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். இந்த சாதனையை செய்தது திராவிட மாடல்.மக்கள் தேவைகளை உணர்ந்து, நல்ல பல திட்டங்களை செய்துகொண்டிருக்கும் திராவிட மாடல் அரசிடம் மக்கள் தங்களின் கனவுகளை சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான், ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்.
இன்றிலிருந்து 30 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களையும் அரசின் சார்பில் தன்னார்வலர்கள் சந்திப்பார்கள். அவர்களிடம் உங்களின் கனவுகளை சொல்லுங்கள். அதையெல்லாம் அவர்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்துகொள்வார்கள். அது எல்லாவற்றையும் ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
What's Your Reaction?

