திருப்பத்தூரில் இரட்டைக் கொலை! தொடரும் கொலைகள்... தவெக அரசை விளாசிய உதய், கனிமொழி!

திருப்பத்தூரில் பட்டப்பகலில் அரங்கேறிய இரட்டைக் கொலை சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள அதிரடி கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nov 20, 2026 - 21:20
திருப்பத்தூரில் இரட்டைக் கொலை! தொடரும் கொலைகள்... தவெக அரசை விளாசிய உதய், கனிமொழி!
Kanimozhi & Udhay React Tirupattur Double murder!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஆண், பெண் இருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தவெக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பத்தூரில் அரங்கேறிய கொடூரம்!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே உள்ள தனியார் காலிமனையில் ஆண், பெண் என இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காரில் வந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த ஆண் திருவண்ணாமலையைச் சேர்ந்த ரஞ்சித் என்பதும், பெண் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலை அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை!

இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பத்தூர் காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

'உணர்வற்ற ஆட்சி... இனி என்ன சொல்வது?' - கனிமொழி காட்டம்!

இந்த இரட்டைக் கொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், குற்றங்களைத் தடுக்கத் தவறிய காவல்துறையாவது, இந்தப் படுகொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

'சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட டம்மி முதலமைச்சர் முன்வர வேண்டும்!' - உதயநிதி ஆவேசம்!

இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

திருப்பத்தூரில் பட்டப்பகலில் இரட்டைக் கொலை நடைபெற்றுள்ள நிலையில், பல்லாவரத்தில் ஆகாஷ் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, காவல்துறை தலைமை இயக்குநர் மூலம் புள்ளிவிவரங்களை வெளியிட்டு அரசு சமாளிக்கப் பார்க்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாக விமர்சித்துள்ள அவர், பழிபோடும் அரசியலையும், சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்கும் செயல்பாடுகளையும் கைவிட்டு, உண்மையான நிர்வாக நடவடிக்கைகளில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி!

திருப்பத்தூரில் நடைபெற்ற இரட்டைக் கொலையும், பல்லாவரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் அரசியல் ரீதியாகப் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பி வருகின்றன.

குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்களா? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்குமா? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow