கம்யூ. கட்சி திமுகவிடம் அடிமையாகிவிட்டது - எஸ்.பி.வேலுமணி

"மக்களவைத் தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாது"

Mar 24, 2024 - 08:28
கம்யூ. கட்சி திமுகவிடம் அடிமையாகிவிட்டது - எஸ்.பி.வேலுமணி

திமுகவிடம் கம்யூனிஸ்ட் கட்சி அடிமையாகி விட்டது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் அருணாச்சலம் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருப்பூர் அரிசி கடைவீதியில் உள்ள மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.  
 

அப்போது உரையாற்றிய எஸ்.பி.வேலுமணி, “தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி. கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் 4 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி பெற முடிந்தது. தற்போது பாஜக வளர்ந்து விட்டது போல ஒரு மாயையை உருவாக்கி வருகின்றனர். ஆனால், இந்த முறை அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை” எனக் கூறினார். 

 
“இந்த தேர்தல் முக்கியமானது, நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு நம் பலத்தை காட்டக்கூடிய தேர்தல். திருப்பூரில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடக் கூடிய நிலையில், தற்போது உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொள்கை இல்லை. திமுகவிடம் அடிமையாகி விட்டது” எனவும் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow