"அவர்கிட்ட ஒன்னுமே இல்லங்க.." ED அறிக்கையால் ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன்

பணம் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லை என அமலாக்கத்துறை கூறியதை அடுத்து, 6 மாதங்களுக்குப்பின் ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய்சிங்குக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Apr 2, 2024 - 14:58
"அவர்கிட்ட ஒன்னுமே இல்லங்க.." ED அறிக்கையால் ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன்

கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக்கொள்கை அமல்படுத்தியபோது ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக பாஜக குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து CBI, அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், சஞ்சய்சிங் ஆகிய ஆம்ஆத்மி தலைவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2023 அக்டோபர் 4ம் தேதி சஞ்சய்சிங் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனுக்களை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, சஞ்சய்சிங்குக்கு ஜாமீன் வழங்குவதில் அமலாக்கத்துறைக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார். 

ஊழல் பணம் எதுவும் மீட்கப்படவில்லை அதற்கான அடையாளங்களும் இல்லை எனவும் அப்போது கூறப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். ஒரு சில வாரங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சஞ்சய் சிங் இனி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow