மாநில தலைமையாகும் வானதி..? மத்திய அமைச்சராகும் நயினார்? திடீர் டெல்லி பயணத்தின் பின்னணி என்ன?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லி புறப்பட்டுள்ள நிலையில், பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகத்தான் நியமிக்கப்பட்டார். அதிமுகவுடனான கூட்டணி சமரசத்திற்காகவும், அண்ணாமலையே பாஜக தலைவராக நீடித்தால் பாஜக – அதிமுக கூட்டணி உருவாகாது என்று எடப்பாடியார் திட்டவட்டமாக கூறியதாலும் அண்ணாமலைக்கு மாற்றாக நயினாரை நியமித்ததாக அப்போது பேசப்பட்டது.
தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பாஜகவில் பெரிய அளவிலான தாக்கம் ஏற்படவில்லை என்றும், தற்போது அண்ணாமலையும் பாஜகவில் இருந்து விலகியதால் பாஜகவில் இருந்து பெரிய அளவிலான இளைஞர்கள் கூட்டம் அவரை நோக்கி சென்றுவிட்டதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகையச் சூழலில், நயினாரை மாற்றி வேறொரு தலைமையை நியமிக்க டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளதாகவும், குறிப்பாக ஒரு பெண் தலைவரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நயினார் இன்று(ஆகஸ்ட் 21) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நயினார் நாகேந்திரன் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், பாஜக தேசிய அளவில் சமீபத்தில் மேற்கொண்ட நிர்வாக மாற்றங்களும் காரணம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, தேசிய மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தற்போது கட்சியில் முக்கிய பொறுப்பு ஏதுமின்றி உள்ளார். இந்த சூழலில், வானதி சீனிவாசனும் இன்று மாலை டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயினார் நாகேந்திரனும் வானதி சீனிவாசனும் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பின் பேரில் டெல்லி செல்கிறார்கள் என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் இருவரது டெல்லி பயணமும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனிடையே, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு மாற்றாக நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
மறுபுறம், தமிழக பாஜக தலைவர் பதவியை வானதி சீனிவாசன் நீண்ட காலமாக எதிர்பார்த்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரது டெல்லி பயணமும் கவனம் பெற்றுள்ளது. தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அமைப்பு மாற்றங்கள் குறித்து அவருடன் கட்சி மேலிடம் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இரு முக்கிய தமிழக பாஜக நிர்வாகிகளும் ஒரே நேரத்தில் டெல்லி செல்லும் நிலையில், தமிழக பாஜகவில் புதிய பொறுப்புகள் மற்றும் மத்திய அமைச்சரவை தொடர்பாக முக்கிய முடிவுகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
What's Your Reaction?