ஜென் ஸீ vs மூத்த தலைமுறை Part 3 - உறவுச் சிக்கல்களின் பின்னணி..! 

வேகமாகச் செயல்படும் ஜென் ஸீயும், அனுபவத்தை நம்பும் மூத்த தலைமுறையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாததே தலைமுறை இடைவெளி மற்றும் உறவுச் சிக்கல்களுக்கு முக்கிய காரணமாகிறது.

Sep 28, 2026 - 20:00
ஜென் ஸீ vs மூத்த தலைமுறை Part 3 - உறவுச் சிக்கல்களின் பின்னணி..! 

ஜென் ஸீ பிரிவைச் சேர்ந்த இளம்  சாஃப்ட்வேர் இஞ்ஜினீயர்,  தங்கள் தலைமுறையின் தனித்துவம் பற்றி கடந்த அத்தியாயத்தில் சொல்லத் தொடங்கியதை தொடர்ந்து கேட்போம்… 

புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள எங்களுக்கு வழிகாட்டுதல் தேவைதான். ஆனால் அதை மூத்தவர்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று இல்லை. இணையதளங்களில் நாங்களே தெரிந்துகொள்ள வசதியாக பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஒரு விஷயத்தை மூத்தவர்கள் அணுகும் விதமும், நாங்கள் அணுகும் விதமும் முற்றிலும் வேறாக இருக்கும்.   மூத்தவர்கள் எதைச் செய்தாலும்  அனுபவசாலி ஒருவரிடம் ஆலோசனை கேட்டு, அதன் பிறகுதான் என்டர் கீயைத் தட்டுவார்கள்.  ஆனால் நாங்கள் முதலில் என்டர் பட்டனைத் தட்டிவிட்டு அதன் பிறகு வரும் பிரச்சனைகளுக்கு ஏற்ப அனுபவசாலிகளைத் தேடுவோம்.

இந்த அணுகுமுறைதான் எங்களுக்கும் மூத்தவர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதலை உருவாக்குகிறது. அவர்கள் ஜென் ஸீக்களை சோம்பேறிகள் என்கிறார்கள்.  எங்களுக்கு பழமையான வழிமுறைகள் மீது விருப்பம் இல்லை. எப்போது போர்க்கால அடிப்படையில் வேலை செய்ய வேண்டும்? எப்போது ரிலாக்சாக வேலை பார்க்கலாம் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

இது போட்டிகள் நிறைந்த யுகம். எங்கள் இடத்தை தக்கவைக்க, தொடர்ந்து எதையாவது  சாதிக்கவேண்டி இருக்கிறது.  அதற்கு நாங்கள் முயற்சி செய்யும்போது, சில தவறுகள் வரும். அதை பின்னடைவாக எடுத்துக்கொள்ள மாட்டோம் .

சரியான வேலை,  குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்தை அடைந்து நிறைய சம்பாதிப்பது, அதே சமயம்  வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருப்பது என்று கம்பியின் மீது நடப்பதுபோல் வாழ்க்கையை பாலன்ஸ் செய்துகொண்டு போகிறோம். ஆனால் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள்  எங்களைப் புரிந்து கொள்ளவில்லை. அதுதான் இப்போதைய பெரும் பிரச்சனை.

”ஜென் ஸீக்களுக்கு பொறுமை இல்லை.  அவர்கள் பெரியவர்களுக்கு மரியாதை தருவதில்லை.  நினைத்ததை உடனே அடைய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்” என்று எங்களைப் பற்றி தவறான அபிப்ராயத்தைக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பக்கமுமே சரியான புரிதல் இல்லை .

எங்களிடம் வேகமும், விரல் நுனியில் தகவல்களும் உள்ளன.  பூமர்களிடம் ஏராளமான அனுபவ பாடங்கள் உள்ளன. ஒருவரை மற்றவர் கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது.  ஒரு தலைமுறையிடம் இருந்து மற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பரஸ்பரம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் அந்த சாப்ட்வேர் இன்ஜினீயர்.

 மூத்த தலைமுறையும், ஜென் ஸீ  தலைமுறையும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் முக்கிய இடம் பள்ளிகள். அங்கே இரு தலைமுறைக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

மித்ரன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow