திடீர் வைராலகும் Studio Ghibli: ஆதரவோடு விமர்சனங்கள் எழுவது ஏன்?
இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் ஜிப்லி பாணியிலான புகைப்படங்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும், பதிப்புரிமை தொடர்பான சில விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் திரும்பும் திசையெல்லாம் உங்கள் கண்ணில் தென்படுவது தற்போது ஜிப்லி பாணியிலான புகைப்படங்கள் தான். ஜப்பானிய பாரம்பரிய கலாச்சாரம், பசுமையான சுற்றுச்சூழல் அம்சங்களை உள்ளடக்கி கையால் வரையப்படும் அனிமேஷன் காட்சியமைப்புதான் ஜிப்லி. உண்மையில் ஒரு பட்டுச்சேலையை நெசவு செய்வது போல் பல்வேறு நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டது ஜிப்லி.
ஆனால் தற்போது தட்டுன வேகத்தில் நம் முன்னே ஜிப்லி பாணியிலான புகைப்படங்களை தந்து விடுகிறது ஜென் ஏஐ (Gen AI) தொழில்நுட்பம். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு அளித்தாலும், இன்னொரு புறம் விமர்சனமும் எழுகிறது. ஜிப்லி கலை எப்போது உருவானது? அதன் சிறப்பம்சம் என்ன? இப்போது ஏன் ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது? என்பதனை இனி காண்போம்.
ஜிப்லி: பின்னணி கதை என்ன?
ஜப்பானில் 1985-ஆம் ஆண்டில் ஹயாவோ மியாசாக்கி (Hayao Miyazaki), இசாவோ தகஹாடா (Isao Takahata) மற்றும் தோஷியோ சுஸுகி (Toshio Suzuki) ஆகியோர் இணைந்து ஜிப்லி ஸ்டுடியோவினை நிறுவினர். ஜிப்லி ஸ்டுடியோ, தனக்கென்று ஒரு பிரத்யேக கலைபாணியை கொண்டு அனிமேஷன் படங்களை கையால் வரைந்து அதன் மூலம் கதை சொல்லும் முறையினை அறிமுகப்படுத்தியது.
“Spirited Away” & “Howl’s Moving Castle” போன்ற அனிமேஷன் திரைப்படங்கள் ஜிப்லி ஸ்டூடியோவின் பின்னணியில் உருவாகியது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து ஜிப்லி ஸ்டுடியோவின் கலைப்பாணியை அடிப்படையாக கொண்டு அனிமேஷன் திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கின. இதன் மூலம், ஜிப்லி அனிமேஷனுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. ஜிப்லி ஸ்டுடியோவின் இணை நிறுவனர் ”ஹயாவோ மியாசாக்கி” ஆசியாவின் வால்ட் டிஸ்னி என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
ஜிப்லி- திடீர் வைரல்:
OpenAI-யின் GPT-4.o மேம்பட்ட புகைப்படங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இதில் ஒரு ஆப்ஷனாக இணைக்கப்பட்டது தான் Studio Ghibli. சாட் ஜிபிடி பயனர்கள் ஜிப்லி ஸ்டுடியோவின் அனிமேஷன் புகைப்படங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். சுற்றுப்புறம் முழுமையும் பசுமை, பளீர் என்றில்லாமல் மென்மையான வண்ணங்கள், அதைவிட முக்கியமாக மனிதர்களின் உணர்ச்சிகளை துல்லியமாக காட்டுதல், இவையெல்லாம் கையால் வரையப்பட்டது போல் காட்சி தருவது ஜிப்லி கலைப்பாணியின் ஹைலைட்ஸ். ஒரே நேரத்தில் பல பயனர்கள் ஜிப்லி கலைப்பாணியினால் புகைப்படங்களை கேட்க திக்குமுக்காடியது சாட் ஜிபிடி. இதற்கு கிடைத்த வரவேற்பு சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பதிப்புரிமை மீறப்படுகிறதா?
நாம் ஏற்கெனவே கூறியது போல் ஜிப்லி முழுக்க முழுக்க கையால் வரையப்படக்கூடியது. பாரம்பரிய ஜிப்லி கலைத் தன்மை வாய்ந்த படங்களை உருவாக்க ஒருவருக்கு சில ஆண்டுகளாவது பயிற்சி தேவைப்படும். ஜென் ஏஐ (Gen AI) இதை தான் தகர்த்துள்ளது. ஜிப்லி கலையினை ”Democratizing art” ஆக மாற்றியுள்ளது. Democratizing art என்றால், ஒரு கலையினை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் மாற்றியுள்ளது. யாரும் அந்த கலையினை தன் தேவைக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப உருவாக்கலாம், பகிரலாம்.
இன்றளவில், கையால் வரையப்பட்ட ஜிப்லி கலைத்தன்மை வாய்ந்த படங்களை பெற நீங்கள் குறைந்தப்பட்சம் 70 முதல் 250 டாலர் வரை செலவிட நேரிடும். ஆனால், ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரே ஒரு "prompt" கொடுத்தால் போதும் உங்களுக்கு ஜிப்லி புகைப்படம் வந்துவிடும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், உண்மையான ஜிப்லி படம், பொருளாதார ரீதியில் மீடில் கிளாஸ் மனிதர்களுக்கு எட்டாக்கனி. சாட் ஜிபிடி- மூலம் பெறப்படும் ஜிப்லி படங்கள் ஒருவகையான போலி பிரதி எனலாம். இதுப்போல் எளிமையாக கிடைப்பதால் பாரம்பரியமாக கலையினை பயின்று கையால் வரையும் கலைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுப்போல் டிஜிட்டல் முறையில் தொடர்ந்து படங்களை உருவாக்கும் பட்சத்தில் ஒருக்கட்டத்தில் கலையின் தரம் முற்றிலும் குறையலாம் எனவும் ஒருதரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஜிப்லி ஸ்டுடியோவின் தனித்தன்மை வாய்ந்த ஆக்கத்தை சாட் ஜிபிடி மீள் உருவாக்கம் தான் செய்கிறது. இதற்காக ஜிப்லி ஸ்டுடியோவிற்கு என்ன பயன் கிடைக்கிறது? இது பத்திப்புரிமை மீறலில் வராதா? எனவும் கேள்விகளை ஒருதரப்பினர் எழுப்பி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர், இதனால் ஒரு போதும் உண்மையான ஜிப்லி கலைக்கோ, கலைஞர்களுக்கோ பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை. இந்த கலை அனைவரையும் எளிதில் சென்றடையும். AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் புகைப்படங்களை எதிர்ப்பது முட்டாள்தனம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அனிமேஷன் புகைப்படங்களை தரும் AI:
சாட் ஜிபிடி தவிர்த்து எலான் மஸ்கின், க்ரூக் ஏஐ (Grok AI) வாயிலாக ஜிப்லி பாணியிலான புகைப்படங்களை உருவாக்கலாம். ஆனால், சாட் ஜிபிடி அளவுக்கு துல்லியமாக இல்லை என சில பயனர்கள் தெரிவித்துள்ளார்கள். ”Leonardo.Ai” இதனை நீங்கள் இலவசமாக பயன்படுத்தி உயர் தரத்திலான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க முடியும் ஜிப்லி பாணி உட்பட. Deep Dream Generator- இந்த ஏஐ தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கையால் வரையப்பட்ட பெயிண்டிங் போன்ற படங்களை பெற இயலும். Bing Image Creator- மைக்ரோசாப்ட் ஏஐ-வான பிங்க் மூலம் அனிமேஷன் ஸ்டைல் தொடர்பான படங்களை உருவாக்க இயலும். இவைத்தவிர்த்து Runway ML , Diffusion web Apps, Fotor AI, Dream By wombo போன்ற ஏஐ வாயிலாகவும் அனிமேஷன் தொடர்பான படங்களை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






