ஒரே கல்லில் இரண்டு மாங்காய்…. முதலமைச்சரின் டெல்லி பயணம்!
முதலமைச்சர் விஜய் இன்று டெல்லியில் நடைபெறும் சோனியா காந்தி நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
சட்டம் ஒருங்கு பிரச்சினை, கள்ளக்குறிச்சி விவகாரம் என தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக காணப்படும் நிலையில் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சோனியா காந்தி சுயசரிதை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துக் கொள்வது மட்டுமே, உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக வெளியாகி உள்ளது. ஆனால் அதை கடந்து பல்வேறு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக முதலமைச்சராக டிகே சிவகுமார் பொறுப்பேற்ற நாளில் இருந்து மேகதாது விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளார். காவரி படுகையில் எந்த ஒரு கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ள நிலையிலும், அதை ஒரு பொருட்டாக கருதாத கர்நாடக முதலமைச்சர் சிவகுமார், மேகாது விவாகாரத்தில் வேகம் காட்டிவருகிறார். திட்ட அறிக்கை தயாரிப்பது, கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் பிரதமர் மோடி முன்னிலையிலேயே தனது கோரிக்கையை சிவகுமார் வலியுறுத்தியுறுத்தினார். அது மட்டுமல்லாமல், மேகதாது அணை தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும், நீரை இருமாநிலங்களும் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறிவருகிறார். அணைக்கட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்திடமே நேரடியாக கோரிக்கை விடுக்கும் அளவுக்கு கார்நாடக முதலமைச்சர் மேகதாது விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இது தவெக அரசுக்கு கடும் நெருக்கடியை தந்துள்ள நிலையில் அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரமும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அந்த பிரச்சினையையும் முதலமைச்சர் பேச வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எல்லாவற்றிக்கும் மேலாக, தேர்தல் பிரச்சாரத்தின் போதும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னரும் பாஜகவை கொள்ளை எதிரியாக பகிரங்கமாக அறிவித்த விஜய் அக்கட்சியை பெரிய அளவில் அரசியல் ரீதியாக எதிர்ப்பதில்லை என்ற விமர்சனம் வலுவாக உள்ளது.
இதற்கு ஏற்றார் போல மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், முதலமைச்சர் என்ற முறையில், விஜய் பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார். இதன் அடிப்படையிலேயே இந்த முறையும் அவரது டெல்லி பயணம் இருக்கும் என்று ஆளும் கட்சி தரப்பில் கூறப்படுகிறது.
அதேவேளையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, அக்கட்சிக்கு தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் இடமும் கொடுத்துள்ளார். ராகுல்காந்தியுடன் இணைக்கமான அரசியல் உறவை கடைப்பிடித்து வரும் முதலமைச்சர் விஜய், அவருடன் தனிப்பட்ட விதத்திலும் நட்பு பாராட்டி வருகிறார். அண்மையில், ராகுல்காந்தி, தமிழகம் வந்து தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் விஜயை சந்தித்தது பேசுபொருளானது. இப்படி இருக்க, சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியிட்டு விழா, மற்றும் பிரதமருடனான சந்திப்பு என்ற முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம், முக்கிய அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?