திமுக ஆட்சியின் திட்டங்கள் பற்றி ஸ்டாலின் பேசத் தயாரா?.. உதயநிதி விளம்பரத்திற்காக செங்கலை காட்டுகிறார்.. எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு..
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து மேடையில் தாம் பேசத் தயார் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து ஸ்டாலின் பேசத் தயாரா? என சவால் விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக உடையவில்லை ஒன்றாக இருக்கிறது என்பதற்கு இங்கு கூடியுள்ள மக்கள் வெள்ளமே சாட்சி. அதிமுகவை உடைக்க ஸ்டாலின் எடுத்த அத்தனை அவதாரங்களும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதவியோடு தூள்தூளாக்கப்பட்டது. அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க பாடுபட்டதால், அனைத்து துறைகளிலும் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது.
பாஜகவில் புதிதாக வந்துள்ள தலைவருக்கு, விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுப்பதே வேலை. இப்படி செய்து மக்களை ஈர்க்க பார்க்கிறார். அரசியல் கட்சித் தலைவர்கள் பல வழிகளில் மக்களை சந்திப்பார்கள். ஆனால் இந்த தலைவர் டெக்னிக்காக அவ்வப்போது பேட்டி கொடுத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார். அவரது செயல் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. இங்கு உழைப்பவர்களுக்குத் தான் மரியாதை உண்டு.
மத்தியில் இருந்து தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவதால் என்ன பிரயோஜனம். வருபவர்கள் ஏதாவது திட்டத்தை கொடுத்தால் அதனால் மக்கள் பயனடைவார்கள். அதைவிட்டுவிட்டு விமானத்தில் இருந்து இறங்கி சாலையில் பயணித்தால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா? தமிழக மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல, அறிவுத்திறன் மிக்கவர்கள். அவர்களின் ஏமாற்று வேலை தமிழக மக்களிடம் எடுபடாது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களால் மக்கள் ஏராளமாக பயன் பெற்றுள்ளனர். இந்த சூழலில் யார் யாரோ வந்து ஏதேதோ பேசி மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். தமிழகத்தில் இது ஒருபோதும் நடக்காது. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக தரப்பில் தெரிவித்த நிலையில், பிரதமரோ, மத்திய நீர்பாசனத்துறை அமைச்சரோ, இது குறித்து ஏதேனும் கருத்து தெரிவித்தார்களா?
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனை குறித்து நான் மேடையில் பேசத் தயாராக உள்ளேன். இந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து முதலமைச்சர் பேசட்டும். இப்படி நான் பலமுறை சவால் விட்டும் அவரிடம் இருந்து பதிலே வரவில்லை. ஆனால் இதற்கு மாறாக என்னை அவதூறாக பேசி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
அமைச்சர் உதயநிதி எய்ம்ஸ் செங்கலை, அவர்களது எம்.பி.க்களை வைத்து நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுத்திருந்தால் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் ஊர் ஊராகச் சென்று விளம்பரத்திற்காக மட்டுமே செங்கலை காட்டிக் கொண்டிருக்கிறார்" இவ்வாறு அவர் விமர்சித்தார்.
What's Your Reaction?