வாக்காளர் பட்டியல், ஆட்டோ பிரசாரம், நோட்டீஸ்! - தவெகவினருக்கு விஜய் போட்ட உத்தரவு
ஆட்டோ பிரச்சாரம் செய்வதுடன் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து இப்பணியில் உறுதுணையாக இருக்க வேண்டும்
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தவெகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதைத்தொடர்ந்து கட்சியின் கொடி அறிமுகம் செய்து வைத்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.
இதனைத்தொடர்ந்து அரசியல் பணிகளில் விஜய் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெகவின் மாநில மாநாடு அக்.27ம் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை, கொள்கை தலைவர்கள் யார் என விஜய் விளக்கினார். மேலும் தமது அரசியல் எதிரிகள் யார், மேலும் 2026 சட்டமன்ற தேர்தல், கூட்டணி ஆட்சியில் பங்கு, திமுக எதிர்ப்பு என பல்வேறு விஷயங்கள் விஜய் பேசியிருந்தார்.
தவெக தலைவர் விஜய்யின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து விஜய் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பனையூரில் தவெகவின் செயற்குழுக்கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களை நிறைவேற்றினார். இதனைத்தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் விஜய் மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியத் தேர்தல் ஆணையம், 01.01.2025 என்பதைத் தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது. இம்மாதத்தில் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. புதிதாகப் பெயர் சேர்க்க, சில ஆவணங்களைச் சான்றாக இணைக்க வேண்டும். மேலும் அங்கு வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை உடனுக்குடன் நிரப்பி, முகாம்களில் உள்ள அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கழகத்தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் படி, தவெக சார்பாக தங்கள் மாவட்டத் தொகுதிகளில் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேற்குறிப்பிட்ட இரண்டு வாரங்களிலும் (நான்கு முகாம் நாட்களில்)மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் மேற்பார்வையில், ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள ஏழு (7) தற்காலிகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை ஈடுபடுத்திக்கொண்டு இம்முகாம் தொடர்பாக ஆட்டோ பிரச்சாரம் செய்வதுடன் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து இப்பணியில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?