“கார்ப்பரேட் முதலாளியா? கம்யூனிஸ்ட் MP-யா?” சு.வெங்கடேசனுக்கு நீதிபதி சுவாமிநாதன் பதிலடி!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே நேரடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

Nov 16, 2026 - 17:52
“கார்ப்பரேட் முதலாளியா? கம்யூனிஸ்ட் MP-யா?” சு.வெங்கடேசனுக்கு நீதிபதி சுவாமிநாதன் பதிலடி!

தமிழ்நாடு அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே நேரடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அரசு நூலகங்களுக்கு ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி எழுத்தாளர்கள் பெயரில் தரமற்ற புத்தகங்களை விற்றுப் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. குறிப்பாக கோவை பெரியார் அறிவுலகம் நூலகம் தொடர்பான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 13-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நீதிபதி சுவாமிநாதன், போலியான புத்தகங்களை வாங்கிச் செய்த பாவங்கள் கழிய மகா பெரியவரின் புத்தகங்களை அலமாரிகளில் அடுக்கி வைக்க வேண்டும் என குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சு.வெங்கடேசன் எம்பி, ஊழலைச் சட்டப்படி தண்டிப்பதே நீதிபதிகளின் வேலை என்றும், பாவ-புண்ணியம் பேசுவது ஜோதிடர்களின் வேலை என்றும் தனது சமூக வலைதளத்தில் சாடியிருந்தார்.

நூலகப் புத்தகக் கொள்முதல் தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சு.வெங்கடேசனின் விமர்சனத்திற்கு அவர் வெளிப்படையாகப் பதிலடி கொடுத்தார். நான் பேசியதற்கு எம்பி அறிவுரை கூறுவதை ஏற்க முடியாது.

சில வாரங்களுக்கு முன்பு மதுரை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, உயர்ரக ஆடை மற்றும் விலை உயர்ந்த ஷூ அணிந்து, பென்ஸ் காரில் வந்திறங்கிய ஒருவரைப் பார்த்து கார்ப்பரேட் முதலாளி என நினைத்ததாகவும், உற்றுப் பார்த்தபோதே அவர் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் என்பது தெரிந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டார். ஒரு கம்யூனிஸ்ட் தலைவருக்குப் புத்தக ராயல்டி மூலம் மட்டும் இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை வந்திருக்க வாய்ப்பில்லை என்று தான் கேள்வி எழுப்பலாமா என நீதிபதி காட்டமாக வினவியது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow